திமுக ஆட்சியை சரிசெய்ய அதிமுக வெற்றி உதவும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரித்து இடையன்காட்டு வலசு பகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை பேசியதாவது:
திமுக அளித்த 517 வாக்குறுதிகளில் 49 மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை, சமையல் எரிவாயு மானியம் ரூ.100 என, 22 மாதங்களுக்கு மொத்தம்ரூ.24,200 வழங்குமாறு பிரச்சாரத்துக்கு வரும் அமைச்சர்களிடம், வாக்காளர்கள் கேட்க வேண்டும். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால்தான், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறும்.
இந்த தொகுதியில் வாக்காளர்களை பட்டியில் அடைத்துவைத்து, தமிழக அரசியலை 1950-60 காலகட்டத்துக்கு திமுக எடுத்துச் சென்றுள்ளது. இந்தியாவில் வேறு எங்கும் இந்த அநியாயம் நடைபெறவில்லை. திருமங்கலம், அரவக்குறிச்சி இடைத்தேர்தல்களால், இந்திய அளவில் தமிழகத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.
தற்போது ஈரோடு கிழக்கில் திமுக செய்யும் தீங்கான செயல்களால், இப்பகுதி மக்களுக்குத்தான் கெட்ட பெயர் உண்டாகும். இங்கு முகாமிட்டுள்ள 30 அமைச்சர்களும் வரும் 27-ம் தேதி வரைவாக்காளர்களுக்கு ராஜ மரியாதை அளிப்பார்கள். அதன் பின்னர் அவர்கள் இங்கு இருக்க மாட்டார்கள். ஆனால், அதிமுக சார்பில் இருமுறை வெற்றி பெற்றுள்ள வேட்பாளர் தென்னரசு, இதே பகுதியில் சுற்றி வருவார்.
கடந்த 22 மாத திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு, நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. தடம்புரண்டுச் செல்லும் ஆட்சியை சரிசெய்ய, அதிமுக வெற்றி உதவும். கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலர் ஒருவரால், ராணுவ வீரர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். நாட்டைக்காக்கும் ராணுவ வீரர் கொல்லப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தால் 5ஆண்டுகளில் 3.50 லட்சம் பேருக்குஅரசு வேலையும், ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு தனியார் வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், எதுவும் நிறைவேறவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.