சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஓசூர் அருகே உத்தனப்பள்ளியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் 46-வது நாளான நேற்று கண்ணில் கருப்பு துணியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் பரப்பளவில் 5-வது சிப்காட் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இப்பணிக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறு, குறு விவசாயிகள் உத்தனப்பள்ளியில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 46-வது நாளான நேற்று உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தங்கள் கண்களில் கருப்பு துணியைக் கட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.