மொரட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொருட்களை விற்பனை செய்யும் பிரதான நிறுவனமொன்றின் களஞ்சியசாலையில் வைக்கப்பட்டிருந்த 25 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை திருடிய அதே நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தேக நபர்கள் அங்கிருந்த 25 இலட்சத்துக்கு அதிக பெறுமதியான மின்சாதனப் பொருட்கள், ஆடைகள் மற்றும் பல்வேறு வகையான பெறுமதியான பொருட்களை இவ்வாறு திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக சந்தேக நபரில் ஒருவர் முச்சக்கரவண்டியில் வந்து களஞ்சியசாலையில் இருந்த பொருட்களை திருடிச் சென்ற சந்தர்ப்பத்தில் அதில் திருடப்பட்ட பொருட்கள் நிறைந்த பை ஒன்றை மறந்துவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த பையை பார்வையிட்ட நிறுவனத்தின் மற்றைய ஊழியர்கள் பிரதம அதிகாரிக்கு தெரியப்படுத்தியதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பொலிஸில் முறைப்பாடு செய்தமைக்கு அமைவாக சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 51 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் நிகவெரட்டிய மற்றும் மிஹிந்தலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர்கள் எனவும் அவர்கள் இதற்கு முன்னர் பல தடவைகள் கைதுசெய்யப்பட்டு, புனர்வாழ்வு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்று, மீண்டும் விடுவிக்கப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் தொடர்புபட்டுள்ளதாகவும் அவரை கைதுசெய்ய மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.