நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே தேர்தல் குறித்து தீர்மானிப்போம்

153 0

ள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதியை வழங்குவது கடினம் என திறைசேரி அறிவித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இது தொடர்பான இறுதி தீர்மானத்தை எடுக்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே எம்மால் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

மேலும், நிதி அமைச்சர் என்ற ரீதியில் தேர்தலுக்கான நிதியை விடுவிப்பதற்கு திறைசேரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அனுமதியளிக்க வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவா சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குவது கடினமாகும் என்று என நிதி அமைச்சின் செயலாளர் தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேற்று முன்தினம் (17) வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் அரச அச்சகத்துக்கு நிதி வழங்கப்படாமையின் காரணமாக தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் வழங்கப்படாமல் தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே காணப்படுகின்ற நிலையில் தேர்தல் ஆணைக்குழுவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வினவியபோதே நிமால் புஞ்சிஹேவா கேசரி வார வெளியீட்டுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் நிலவும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் அத்தியாவசிய சேவைகளுக்கான செலவுகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு நிதி அமைச்சு சுற்று நிரூபமொன்றை வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையிலேயே தேர்தலுக்கான நிதியை வழங்குவது கடினமாகும் என்று திறைசேரி அறிவித்துள்ளது.

அமைச்சரவை அங்கீகாரத்துடன் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபமொன்றில் அத்தியாவசிய தேவைகள் எவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, நிதி அமைச்சின் சுற்று நிரூபத்துக்கு அப்பால் அவர்களால் செயற்பட முடியாது. அதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அனுமதியளிக்க வேண்டும். அதனையே திறைசேரி குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை முன்னெடுப்பது தொடர்பில் எவ்வித தீர்மானத்தையும் தேர்தல் ஆணைக்குழு இதுவரை எடுக்கவில்லை. தேர்தல் தொடர்பில் அடுத்த வாரம் நீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. அதன் பின்னரே நாம் ஒன்றுகூடி தீர்மானமொன்றை எடுப்போம் என்றார்.