கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்படுகின்ற ஆதன வரி அறவீட்டில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த பிரதேச சபையால் அறவிடப்படுகின்ற ஆதன வரி அறவீட்டில் தன்னிடம் ஒரே காலப்பகுதிக்கு இரண்டு தடவைகள் வரி அறவிட்டுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
தன்னிடம் 2021 ஆம் ஆண்டுக்கு 29.12.2022 திகதியில் 4172.90 ரூபா அறவிட்டுள்ளதோடு, மீண்டும் அதே காலப்பகுதிக்குரிய ஆதன வரியாக 4172.90 ரூபாவை 28.01.2023 அன்றும் கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்பட்டுள்ளதோடு, அதற்குரிய 15 வீத தாமத தண்டப் பணமாக 1064.08 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பிரதேச சபையின் தவிசாளரை நேரில் சந்தித்து அவரது கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் இவ் விடயத்தை கண்டுகொள்ளவில்லை என்றும் இதன் காரணமாக செயலாளருக்கு எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கரைச்சி பிரதேச சபையால் அதிகரித்த ஆதன வரி அறவிடப்படுகின்றமைக்கு எதிராக தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகின்ற நிலையில் இவ்வாறு ஒரே காலப்பகுதிக்கு இரண்டு தடவைகள் அறவிடப்படுகின்ற நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் மேலும் அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது.