மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து நள்ளிரவு புறப்பட்ட MH 370 விமானம், அதன் இலக்கான பீஜிங்கை சென்றடைவில்லை. இதனால், பீஜிங் விமான நிலையத்தில் MH 370 விமானத்தில் பயணித்திருந்தவர்களை அழைப்பதற்காக காத்துக் கொண்டிருந்த உறவினர்கள் பதற்றத்துக்கு உள்ளாகினர். நேரம் செல்லச் செல்ல விமான நிலையத்தில் அழுகை சத்தங்கள் ஆக்கிரமிக்க தொடங்கின. எனினும், விமானத்தின் நிலை குறித்து உறுதியான தகவலை அப்போது மலேசிய அரசும் தெரிவிக்கவில்லை. சீன அரசும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து MH 370 விமானம் தாமதம் என்றே கூறப்பட்டு வந்தது. இறுதியில், விமானத் துறை அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர். கோலாலம்பூரிலிருந்து 239 பேருடன் புறப்பட்ட MH 370 விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டது. உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்தன. இது நடந்த தினம் மார்ச் 8, 2014.
MH 370 விமானம் மாயமாகி 9 ஆண்டுகள் நெருங்கவுள்ளது. ஆனால், இதுவரை மாயமான விமானம் என்ன ஆனது என்ற தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. இன்னமும் விமானத்தில் பயணித்த 239 பேரின் உறவினர்கள் ஆறாத வலியுடன் தங்களது நாட்களை நகர்த்தி வருகின்றனர். எனினும், என்றாவது ஒரு நாள் MH 370 விமானத்துக்கு என்ன ஆனது, எங்கு விழுந்தது போன்ற தகவல்கள் தங்களை வந்தடையும் என்று அவர்கள் நம்புகின்றனர். அவர்களின் நம்பிக்கை நிறைவேறுமா..?
மெய்நிகர், செயற்கை நுண்ணறிவு என அறிவியல் வளர்ச்சி உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டில் சுமார் 239 நர்களுடன் பயணித்த விமானம் என்ன ஆனது என்பதை 9 ஆண்டுகளாக கண்டறியமுடியவில்லை என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? இந்த விவகாரத்தில் பரந்த பார்வையில் சிந்தித்தால், எங்கோ ஒரு புள்ளியில் உண்மை வேண்டும்மென்றே மறைக்கப்பட்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது. ஆனால், இந்த உண்மையும் நாம் அறிவியல் மூலம்தான் கண்டறிய முடியுமே தவிர, இங்கு சதி கோட்பாடுகளால் அல்ல..!