சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.
அதேவேளை இலங்கையின் ஜனநாயக செயன்முறையில் அனைத்து தேர்தல்களும் இன்றியமையாதவையாகும் என்று சுட்டிக்காட்டியுள்ள அச்சங்கம், அதில் எவ்வித இடையூறுகளும் ஏற்படுத்தப்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டமையால் தபால்மூல வாக்குச்சீட்டு விநியோகப் பணிகள் கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
அதனையடுத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்படுவதாக வெள்ளிக்கிழமை (17) தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவதை தடுப்பதை நோக்காகக் கொண்டு அண்மைய சில வாரங்களாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.
வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு முன்னர் அதற்குரிய நிதியை வழங்குமாறு அரச அச்சக கூட்டுத்தாபனம் நிபந்தனை விதித்துள்ளமையும், தேர்தலை நடத்துவதற்கு தம்மிடம் நிதியில்லை என்று திறைசேரியின் செயலாளர் கூறுவதும் இவற்றில் உள்ளடங்குகின்றன.
வரவு-/ செலவு திட்டத்தில் தேர்தல்களுக்கென 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் பின்னணியிலேயே இவ்வனைத்து விடயங்களும் நடைபெறுகின்றன.
திறைசேரியின் செயலாளர், அரச அச்சக கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளின் கடந்த சில வாரகால செயற்பாடுகள் தேர்தலை நிறுத்துவதை இலக்காக கொண்ட முயற்சிகளேயாகும். அவை இலங்கை மக்களின் உரிமையை புறக்கணிப்பதுடன், மக்களின் இறையாண்மையை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் வகையிலும் அமைந்திருக்கின்றன. அதுமாத்திரமன்றி, சட்டத்தின் ஊடாக நிர்ணயிக்கப்பட்ட தேர்தல்களை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் மீதான மிக மோசமான தாக்குதலாக அமைந்திருப்பதுடன், வருங்கால தேர்தல் செயன்முறையையும் அபாயத்தில் தள்ளியுள்ளன.
இவ்வாறான நடவடிக்கைகள் மக்களின் விருப்பத்துக்குப் புறம்பான நிறைவேற்றதிகாரம் கொண்டவர் தேர்தலுக்குரிய வள ஒதுக்கீட்டில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கும், இலங்கை மக்கள் தமது பிரதிநிதி அல்லது தலைவரை தேர்ந்தெடுப்பதை தடுப்பதற்கும் வாய்ப்பளிக்கும் என்று எச்சரிக்கின்றோம்.
அதேவேளை அரசியலமைப்புக்கான 104 பி (2) மற்றும் 104 ஜிஜி (1) ஆகிய சரத்துக்களின் பிரகாரம், அனைத்து அரச கட்டமைப்புக்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் ஒத்துழைத்து செயற்படவேண்டிய கடப்பாட்டை கொண்டிருப்பதுடன், அதனை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
அதுமாத்திரமன்றி அரசியலமைப்புக்கான 33 (சி) சரத்தின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைவாக, சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களை நடத்துவதற்குரிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
எனவே, அரசியலமைப்புக்கும் சட்டத்துக்கும் மதிப்பளிக்குமாறு அரசாங்கத்தையும், அனைத்து அரச அதிகாரிகளையும் வலியுறுத்துவதுடன், எவ்வித இடையூறுகளுமின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை ஏற்கனவே திட்டமிட்டவாறு நடத்துமாறும் கோருகின்றோம்.
தேர்தல் செயன்முறையில் இடையூறை ஏற்படுத்தும் முயற்சிகள் தோற்கடிக்கப்படுவதுடன் மாத்திரமன்றி, அத்தகைய நடவடிக்கைகளுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் ஊடாக கையாள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.