மறுசீரமைப்புக்களின்றி தற்போதைய நெருக்கடியிலிருந்து மீளமுடியாது!

138 0

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ள கொள்கைகளை இப்போது மறுசீரமைக்காவிட்டால், தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கையால் மீளமுடியாது என்றும், ஐந்து வருடங்களின் பின்னர் மீண்டும் கடன்நெருக்கடி தோற்றம்பெறும் என்றும் தெற்காசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றம் வட ஆபிரிக்கப் பிராந்தியங்களுக்கான உலக வங்கியின் முன்னாள் சிரேஷ்ட பொருளியலாளர் சாந்த தேவராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைவரம் மற்றும் அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிகழ்நிலை முறைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலொன்றிலேயே சாந்த தேவராஜன் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார். அக்கலந்துரையாடலில் அவர் மேலும் கூறியதாவது:

நாட்டில் கொள்கை ரீதியான மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு ‘அரகலய’ என்ற மக்கள் எழுச்சி இயக்கத்தினால் முன்னாள் ஜனாதிபதியிடம் கோரப்பட்டது. குறிப்பாக தற்போதைய கொள்கைகள் வறிய மக்களுக்கு நன்மையளிக்கக்கூடியவையாக அமையவில்லை.

உதாரணமாக சக்திவலு மானிய வழங்கலை எடுத்துக்கொண்டால் 40 சதவீதமான பெற்றோலியம் நாட்டின் மொத்த சனத்தொகையில் 20 சதவீதமான செல்வந்தர்களுக்கு மானியமாக வழங்கப்படுகின்றது. அதனை பணமாக வழங்கினால், அது நாட்டின் அனைத்துத்தரப்பினரையும் சமத்துவமாகச் சென்றடையும். ஆனால் இப்போது 20 சதவீதமான செல்வந்தர்கள் மாத்திரமே பயனடைகின்றனர்.

பெருமளவானோர் தமது பிள்ளைகளுக்கு அவசியமான உணவைப் பெற்றுக்கொடுப்பதற்குத் திணறிக்கொண்டிருக்கும் நாட்டில் செல்வந்தர்களுக்குத் தொடர்ந்து நிதியளிக்கப்படுகின்றது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத விடயமாகும்.

அதேபோன்று 75 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் விவசாய நிலங்கள் தொடர்பான சட்டம் காணப்பட்டது. அதனூடாக விவசாயிகள் நெல்லை (அரிசியை) உற்பத்தி செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இலங்கையிலுள்ள உணவுப்பொருட்களிலேயே அரிசி மாத்திரமே செயற்திறன் குறைந்த உற்பத்தியாக இருக்கின்றது. எனவே இலங்கையில் 150 சதவீதமான விவசாயிகள் வறியவர்களாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஆனால் உண்மையில் தமக்கு வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய பயிர்ச்செய்கை நடவடிக்கையில் அவர்களால் ஈடுபட்டிருக்கமுடியும். ஏனெனில் வாழைத்தோட்டம் மூலம் 75,000 ரூபா வருமானம் பெறுகின்ற விவசாயியை நாங்கள் அறிந்திருக்கின்றோம்.

எனவே இவ்வாறான கொள்கைகளே வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்வதற்கு இலங்கை மக்கள் கொண்டிருக்கும் இயலுமையை வலுவிழக்கச்செய்துள்ளன. அதேபோன்று இப்போது இந்தக் கொள்கைகளை மறுசீரமைக்காவிட்டால், எம்மால் இந்த நெருக்கடியிலிருந்து வெளியே வரமுடியாது. 5 வருடங்களின் பின்னர் மீண்டுமொரு கடன்நெருக்கடி ஏற்படக்கூடும். இவையே பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன என்று சுட்டிக்காட்டினார்.