பொருளாதார நெருக்கடிகளை முன்னிறுத்தி மக்களின் வாக்களிக்கும் உரிமையை பறிக்க முயற்சிக்கும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பினை வெளியிட தயாராகியுள்ளோம்.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக கொழும்பில் திங்கட்கிழமை (20) முன்னெடுக்கப்படவுள்ள பாரிய ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அழைப்பு விடுத்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
வரலாற்றில் முதன் முறையாக வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் பொலிஸ் பாதுகாப்பின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மிகவும் இரகசியமாக முன்னெடுக்கப்பட வேண்டியவையாகும்.
முன்னைய எந்தவொரு தேர்தல்களிலும் அந்த இரகசியத் தன்மையைப் பாதுகாப்பதற்காக சுமார் 30 – 40 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இது தொடர்பில் நாம் பொலிஸ்மா அதிபரிடம் வினவிய போது தன்னிடம் இது தொடர்பான கோரிக்கைகள் எவையும் முன்வைக்கப்படவில்லை என்று பதிலளிக்கின்றார்.
பொலிஸ்மா அதிபர் அரசியலில் ஈடுபடாமல் தேர்தல் நடவடிக்கைகளுக்கு உகந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.
அதே போன்று மக்களின் வாக்குரிமையை மீறுவதற்கு நடவடிக்கை எடுத்து ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு மக்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள தயாராக வேண்டாம் என்று திறைசேரி அதிகாரிகளிடம் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தேசிய மக்கள் சக்தி , ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணைந்து தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கான கூட்டு சதியை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன.
அதன் காரணமாகவே அனைத்திற்கும் வழக்கு தொடரும் ஜே.வி.பி. இம்முறை தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவில்லை. காரணம் தேர்தல் இடம்பெற்றால் தாம் எந்த நிலைமையில் இருக்கின்றோம் என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்வர் என்ற வெட்கத்தினாலாகும்.
தற்போது உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு நிதி இல்லை என்று கூறும் அரசாங்கம் , எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கும் நிதியில்லை என்று கூறும்.
இதனைக் காரணமாகக் காண்பித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது பதவி காலத்தை நீடித்துக் கொள்ள முயற்சிப்பார். அரசாங்கத்தின் இந்த ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பினை வெளியிடுவதற்கு நாளை அனைவரையும் கொழும்பிற்கு வருமாறு அழைக்கின்றோம் என்றார்.