திருமலையில் அமெரிக்கா, இந்தியாவின் கூட்டிணைவில் படைமுகாம் அமைப்பது தொடர்பில் எவ்விதமான பேச்சுக்களையும் முன்னெடுக்கவில்லை என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கைப் படைகளின் அபிமானம் தொடர்பில் அமெரிக்காவிடம் எடுத்துரைத்துள்ளதோடு தொடர்ந்து இருதரப்பு ஒத்துழைப்புக்களுடன் இணைந்து பயணிப்பது பற்றி கவனம் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமலையில் அமெரிக்கா, இந்தியாவின் கூட்டிணைவில் படைமுகாம் அமைப்பது தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்றும், அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் இந்தோ, பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை, பிரதி உதவிச் செயலர் ஜெடிடியா றோயல் தலைமையிலான குழுவினருடன் நடத்திய சந்திப்பின்போது இந்த விடயம் சம்பந்தமாக கரிசனை செலுத்தப்பட்டதா என்றும் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் இந்தோ, பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை, பிரதி உதவிச் செயலர் ஜெடிடியா றோயல் தலைமையிலான குழுவினருடன் நான் பேச்சுக்களை முன்னெடுத்திருந்தேன்.
இதன்போது, பிராந்திய பாதுகாப்பு மற்றும் இலங்கை, அமெரிக்கா இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த எதிர்காலச் செயற்பாடுகள் சம்பந்தமாகவே கரிசனை கொள்ளப்பட்டிருந்தது.
எந்தவொரு சந்தர்ப்பதிலும், திருகோணமலையில் படைமுகாம் அமைப்பது பற்றி பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்றார்.
படையினரின் அபிமானம்
இதேவேளை, ஜெடிடியா றோயல் தலைமையிலான குழுவினருடனான குழுவினருடனான சந்திப்பின்போது, இலங்கைப் படையினரின் அபிமானம் சம்பந்தமாகவும் எடுத்துரைத்துள்ளதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் தெரிவித்தார்.
அவர்,“அமெரிக்கா 2011 செப்டெம்பர் 11 அன்று முகங்கெடுத்த வன்முறை நிகழ்வுகளைப் போன்று 32 ஆண்டுகளாக இலங்கை முகங்கொடுத்து வந்திருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் தான் பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளை மௌனிக்கச் செய்யும் போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது.
இவ்வாறான பின்னணியில் எமது படைவீரர்களை இலக்கு வைத்து அமெரிக்காவினால் விடுக்கப்படும் தடைகள் கவலை அளிப்பதாக உள்ளது.அந்த தடைகள் எமது படையினர் மீதான அபிமானத்தினை குறைப்பாகவும் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “போரின் பின்னரான நிலைமைகளில் அனைத்தின மக்களும் ஒன்றிணைந்து வாழ்வதற்காக அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துவருவதோடு, அதற்கு அமெரிக்காவின் தொடர்ச்சியான பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புக்களையும் வழங்குவதோடு சர்வதேச நாணய நிதியத்தின் கடன்களை பெறுவதற்கு அமெரிக்கா வெளியிட்டு வருகின்ற ஆதரவுச் செயற்பாடுகளுக்கு முழுமையான நன்றிகளையும் தெரிவித்தேன்” என்றும் கூறினார்.