ராணுவ புரட்சிக்கு சதி செய்ததாக கூறப்படுகிற மத குருவை நாடு கடத்த வேண்டுமென்றால், அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும் என்று துருக்கிக்கு அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
துருக்கி நாட்டில் கடந்த 15-ந் தேதி இரவு ராணுவத்தில் ஒரு பிரிவினர் திடீர் புரட்சிக்கு முயற்சித்தனர். இஸ்தான்புல் நகரத்தில் உள்ள முக்கிய பாலங்களை அவர்கள் பிடித்தனர். அங்காராவில் பாராளுமன்ற கட்டிடம் மீதும், அதிபர் மாளிகை மீதும் கடுமையான தாக்குதல் நடத்தினர்.
இருப்பினும் அந்த நாட்டின் அதிபர் எர்டோகன் அழைப்பை ஏற்று மக்கள் வீதிகளில் இறங்கி, ராணுவ கிளர்ச்சியாளர்களை எதிர்த்து சண்டையிட்டனர். முடிவில் ராணுவ புரட்சி முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த மோதல்களில் மக்களில் 161 பேரும், கிளர்ச்சியாளர்களில் 104 பேரும் கொல்லப்பட்டனர். 1,440 பேர் காயம் அடைந்தனர். சுமார் 3 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்பட்டனர். புரட்சி முறியடிக்கப்பட்டதை அந்த நாட்டு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.
இந்த ராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மத குரு பெதுல்லா குலன்தான் சதி செய்துள்ளார் என துருக்கி அதிபர் எர்டோகனும், பிரதமர் யில்டிரிமும் குற்றம் சாட்டினர்.
அமெரிக்காவில் 15 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பெதுல்லா குலனை துருக்கிக்கு நாடு கடத்த வேண்டும் என்று அதிபர் எர்டோகன் வலியுறுத்தினார்.இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி கருத்து தெரிவித்தார்.அப்போது அவர், “மத குருவை நாடு கடத்த வேண்டும் என்ற துருக்கியின் வேண்டுகோளை ஒபாமா நிர்வாகம் பரிசீலிக்க தயார். ஆனால், குலன் தவறு செய்தார் என்பதை துருக்கி நிரூபிக்க வேண்டும். அதற்கான ஆதாரங்களையும் ஒப்படைக்க வேண்டும்” என கூறினார்.
ராணுவப்புரட்சி முயற்சிக்கு பின்னால் அமெரிக்கா இருந்தது என்ற துருக்கி தொழிலாளர் நலத்துறை மந்திரியின் குற்றச்சாட்டை ஜான் கெர்ரி நிராகரித்தார். இதுபற்றி அவர் குறிப் பிடுகையில், “ராணுவப் புரட்சி சதியில் அமெரிக்காவுக்கு தொடர்பு இருக்கிறது என்று கூறுவது மிகவும் தவறு. அது இரு தரப்பு உறவுக்கு கேடு விளை விக்கும்” என எச்சரித்தார்.
இதற்கிடையே, அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள இல்லத்தில் மத குரு பெதுல்லா குலன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
துருக்கி படைப்பிரிவில் எனக்கு ஆதரவாக ஒரு சிறிய பகுதியினர் மட்டுமே இருப்பதை நான் அறிவேன். எனவே ராணுவப்புரட்சி முயற்சியில் அவர்களுக்கு சாத்தியமான ஈடுபாடு இருக்கிறது என்று கூற முடியாது. இந்த புரட்சி முயற்சிக்கு பின்னர் பல நோக்கங்கள் இருக்கக்கூடும். அதில் ஈடுபட்டவர்கள், எதிர்க்கட்சியின் அனுதாபிகளாக இருக்கக்கூடும். தேசியத்துவ கட்சியின் அனுதாபிகளாக இருக்கலாம். புரட்சிக்கு எதுவும் காரணமாக இருக்கலாம்.
ராணுவ புரட்சி முயற்சி வெற்றி பெற்றிருந்தால்கூட நான் துருக்கிக்கு மீண்டும் செல்ல மாட்டேன். அப்படி சென்றால் நான் துன்புறுத்தப்படுவேன். தொல்லைகளுக்கு ஆளாகவும் நேரிடும். இது அமைதியான, தூய்மையான இடம். நான் இங்கு சுதந்திரமாக வாழ்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே துருக்கியில், ராணுவ புரட்சி சதி தொடர்பாக விமானப்படையின் மூத்த அதிகாரி பிரிகேடியர் பெக்கிர் எர்கான் வானும், 10-க்கு மேற்பட்ட அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் கள் சிரியாவில் தாக்குதல் நடத்துவதற்காக துருக்கியில் அமெரிக்கா பயன்படுத்தி வந்த விமானப்படை தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.