யாழ். பல்கலைக்கழகத்தில் 4 வருடங்களின் பின் கலைவாரம்

129 0

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் கலைவாரம் 4 வருடங்களின் பின்னர் மீள இவ்வருடம் வெகு விமர்சையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களிடையை கலை கலாச்சார பண்பாட்டு விளையாட்டு திறன்களை ஊக்குவிக்குமுகமாக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் 20 வருடங்களுக்கு மேலாக குறித்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினம் கலைவார ஏற்பாட்டு குழுவின் தலைவர் ஜெயராசா ஜெனீபன் தலைமையில் யாழ் பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலய முன்றலில் சமயரீதியான அனுஷ்டானங்களுடன் ஆரம்பமான நிகழ்வு தமிழர்களின் பூர்விக கலைகளான மயிலாட்டம்,பொம்மலாட்டம்,

பறையிசை ஆகிய கலை வடிவங்களை தாங்கிய வண்ணம் பரமேஸ்வரா சந்தியினூடாக தபால் பெட்டி சக்தியினை அடைந்து பின்னர் பல்கலைக்கழக பிரதான மைதானத்தினை சென்றடைந்தது.

இதன்பொழுது ஒவ்வொரு அணி மாணவர்களும் வர்ணங்கள் பூசி பறையிசையுடன் இணைந்து பேரணியாக மைதானத்தினை சென்றடைந்தனர்.தொடர்சியாக கலைவார ஏற்பாட்டு குழுவினருக்கும் பல்கலைக்க விரிவுரையாளர்களிற்கும் இடையில் மென்பாந்தட்ட சுற்றுப்போட்டி இடம்பெற்றது. வெற்றியீட்டிய கலைவார ஏற்பாட்டு குழு அணியினருக்கு கலைப்பீடாதிபதி ரகுராம் வெற்றிக்கிண்ணத்தை வழங்கி வைத்தார்.

இதன் பொழுது யாழ் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம்,யாழ் பல்கலைக்கழக பிரதிப்பதிவாளர் அனுசியா,கலைப்பீட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் ஜெல்சின்,யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அ.விஜயகுமார்,கலைப்புட மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்சியாக ஒருவாரம் மாணவர்களிடையே கலை கலாச்சார பண்பாட்டு விளையாட்டு சார் போட்டிகள் நடாத்தப்பட்டு எதிர்வரும் 23ஆம் திகதி மாலை கைலாசபதி கலையரங்கில் மாபெரும் கலைநிகழ்வு இடம்பெறவுள்ளது.