உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தலைப்புச் செய்திகளில் இருந்து மறைந்திருக்கிறது. ஆனால், போரின் வீரியம் இன்னும் குறையவில்லை. உண்மையில், ஒரு வருடம் கழித்துப் பார்க்கும்போது, உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மூன்று வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருப்பதை நாம் அறியலாம்.
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டோன்பாஸ் பகுதியின் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கு ரஷ்யா கடந்த வாரத்தில்கூட கடும்போர் புரிந்ததாக அமெரிக்கா தெரிவித்து இருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய உக்ரைன் முடிவெடுத்தது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுடனும் உக்ரைன் நெருக்கம் காட்டியது. இந்த நடவடிக்கைகளால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ஒரு வருடம் கடந்திருக்கிறது ஆனால் போரில் யாரும் ஆதிக்கம் பெறவில்லை. பல வழிகளில் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உண்மையில், ஒரு வருடம் கழித்து பார்க்கும்போது உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் மூன்று வெவ்வேறு திசைகளில் சென்று கொண்டிருப்பதை நாம் அறியலாம்.
முதலாவது: ரஷ்யா பின்னடைவை சந்திக்கும் – போர் தொடங்கியபோது ரஷ்யா கீவ், டான்பாஸ் மற்றும் கெர்சன் மாகாணங்களில் தாக்குலை தொடர்ந்தது. எனினும் இத்தாக்குதல்கள் தோல்வியடைந்தன. 2022 செப்டம்பரில் உக்ரைனிடமிருந்து சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட நான்கு மாகாணங்களில் பெரும் பகுதியையும் ரஷ்யா இழக்கிறது. இதனால், கீவ் நகரில் ஆட்சி மாற்றத்தை ரஷ்யாவால் கொண்டுவர முடியவில்லை. அங்கு ரஷ்யாவின் இலக்கு சரிந்தது. மேலும், ரஷ்யாவால் உக்ரைன் மீட்கப்பட்ட பகுதிகளை மீண்டும் மீட்டு கிரிமியாவை நோக்கி முன்னேறியது. இதற்கு முக்கிய காரணம், போரில் சண்டையிடுவதற்கு ஆட்கள் பற்றாக்குறையை உக்ரைனில் ரஷ்யா சந்தித்ததுதான். போர் புரிவதற்குச் சிலரை கண்டறிந்தாலும் அவர்களுக்கு பயிற்சி போதவில்லை. இதனால் ரஷ்ய ராணுவம் சோர்வை சந்தித்தது.
மறுபுறம் உக்ரைன் பல வெற்றிக் காரணிகளைக் கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு ஐரோப்ப நாடுகள் மற்றும் அமெரிக்கா ராணுவ உதவிகளை சீராக அளித்து வருகின்றன. இதனால், உக்ரைன் பலமுனைகளிலிருந்து தாக்குதலை நடத்தியது. எனவே, உக்ரைனுக்கு வெற்றியும் கிடைத்தது. மேலும், சர்வதேச அளவில் எரிபொருள் விலை அதிகரிக்கும்போது, சர்வதேச அரங்கில் ரஷ்யாவின் வலிமை குறைந்தது. இதனால், அதன் வாடிக்கையாளர்கள் மாற்று விநியோகர்களை நோக்கிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும்.
நீண்டகாலமாக நடந்து வரும் இப்போர் முடியும் நேரத்தில் உக்ரைன் அதன் எல்லைகளுக்கு மீண்டும் திரும்பும். ரஷ்யா அதன் போர்க் குற்றங்களுக்காக வாதாடும். அதற்கான விலையையும் கொடுக்கும். எவ்வாறாயினும், ரஷ்ய தோல்வி கடுமையாக இருந்தால், அங்கு அரசியல் சீர்குழைவு ஏற்படலாம்.
இரண்டாவது: ரஷ்யா உறுதியான வெற்றியை பெறலாம் – எதிர்முனையில் எடுத்து கொண்டால் குளிர்காலத்தின் முடிவில் ரஷ்யா தொடர்ச்சியான ராணுவ வெற்றிகளைக் காண்டிருக்கிறது. உக்ரைனின் கெர்சன் மாகாணத்தின் பெரும்பகுதியை ரஷ்யா மீண்டும் மீட்டெடுத்துள்ளது. கீவ் நகரை நோக்கி தனது படையெடுப்பை அச்சுறுத்துலுடன் தொடர்கிறது. இலையுதிர்காலத்தில் நன்றாக பயிற்சி பெற்ற தங்கள் படைகள் மூலம் ரஷ்யா, உக்ரைனுக்கு மேற்கு, வடக்கு, தெற்கு என மூன்று பகுதிகளிலிருந்து பதிலடி அளிக்கலாம். இத்தகைய நடவடிக்கைகள் உக்ரைனில் ரஷ்யாவுக்கு வெற்றியை தரலாம்.
உக்ரைனைப் பொறுத்தவரை, மேற்கூறியது நடந்தால் அது மோசமான சூழ்நிலையாக மாறலாம். அதன் விளைவாக ஆயுதப் படைகள் எண்ணிக்கை குறைந்து, ஆயுத விநியோகப் பிரச்சினைகளை உக்ரைன் எதிர்கொள்ளலாம். அப்போது வலிமையிழந்த உக்ரைன் அதிபரை நாம் காணலாம்.
மூன்றாவது: போர் நீடிக்கும் – ரஷ்யா – உக்ரைன் இரு நாடுகளின் கைகளும் போரில் ஓங்காத நிலை ஏற்படலாம். இதனால் போர் இன்னும் சில காலம் நீடிக்கலாம். இதன் விளைவாய் கீவ் மற்றும் டான்பஸ்ஸை கட்டுபடுத்தும் முயற்சியில் ரஷ்யா மீண்டும் இறங்கும். மறுபுறம் உக்ரைன் படைகள் கிரிமியாவை நோக்கி நகரலாம். இதனால் போரின் சமநிலையில் மாறுதல் ஏற்படலாம்.
பேச்சுவார்த்தைகளை ஏற்றுகொள்ளாதவரை இந்தப் போர் முடிவு பெற போவதில்லை. இதே நிலை தொடர்ந்தால் ரஷ்யா தெளிவான வெற்றியை பெறப்போவதில்லை. மேலும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொள்வது என்பது புதினின் தோல்விக்கு சமம். இது புதின் பதவிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டால், அவர் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை இழக்கும் நிலைமை நேரிடலாம். ஆகவே, இந்த நிலை தொடர்ந்தால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீர்க்கப்படாத மோதலாகவே 2023-லும் தொடரும்.
உறுதுணைக் கட்டுரை: தி கான்வர்சேஷன் | தமிழில்: இந்து குணசேகர்