சென்னை மாநகராட்சி சார்பில் பெண் குழந்தைகளைப் போற்றும் வகையில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ திட்ட விழிப்புணர்வு முகாம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் மேயர் ஆர்.பிரியா பங்கேற்று, மருத்துவ சேவைத்துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்தகண்காட்சியை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளைப் பெற்ற1000 தாய்மார்கள், இரு பெண் குழந்தைகளைப் பெற்று குடும்பநல கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்ட 500 தாய்மார்கள், 500 வளரிளம் பெண்கள் ஆகியோரை மேயர் பிரியா பாராட்டி, பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழகத்தில் மிகப்பெரிய மாநகராட்சியான சென்னை மாநகராட்சி மேயர் பதவியை பெண்ணுக்கு ஒதுக்கி, அந்த பதவியை எனக்கு வழங்கியமைக்கு, முதல்வருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத், துணை ஆணையாளர் (கல்வி) ஷரண்யா அறி, நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) கோ.சாந்தகுமாரி, மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் எம்.எஸ்.ஹேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.