விளையாட்டுத்துறையில் அர்ப்பணிப்புடன் செயற்படும் இலங்கையின் அனைத்து பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய விளையாட்டுத்துறை சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை விதிமுறைகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் விளையாட்டுத்துறை பெரு முன்னேற்றம் அடையும் என தாம் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பு, சுகததாச ஹோட்டலில் புதன்கிழமை (15) இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
புதிய விளையாட்டுத்துறை சட்ட விதிகளை அமுல்படுத்துவதற்காக புதிய விளையாட்டுத்துறை சட்டத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
அங்கு தொடர்ந்து பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க,
‘நான் அமைச்சுப் பொறுப்பை ஏற்று ஆறு மாதங்களே ஆகின்றன. இந்தக் காலப் பகுதியில் இலங்கைக்கு பல வெற்றிகள் கிடைத்துள்ளதையிட்டு நான் பெருமை அடைகிறேன். ஜனாதிபதி என்னை விளையாட்டுத்துறை அமைச்சராக நியமித்து, விளையாட்டுத்துறையை சரியான திசையில் கொண்டு செல்லும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். வெளிப்படைத் தன்மையுடனும், நாட்டு மக்களுக்குப் பொறுப்புணர்வுடனும் பணியாற்றுவதே எனது நோக்கம். பயிற்சியாளர்களின் அர்ப்பணிப்பால் சங்கக்காரா, முரளிதரன் போன்ற திறமைசாலிகள் உருவாகினர். அதேவேளை, விளையாட்டுத்துறையில் திறமைசாலிகளை உருவாக்கும் பெரும் பங்கு தேசிய சங்கங்களுக்கு உள்ளது. மக்களுடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. விளையாட்டுத்துறையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நல்ல முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. அதனால்தான் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்தேன்.
’22 மில்லியன் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு. புதிய விதிமுறைகளின்படி, பெயருக்கு மாத்திரம் விளையாட்டுத்துறை சங்கங்கள் இருக்க முடியாது. விளையாட்டுத்துறை சங்கங்கள் பெயரளவில் மாத்திரம் இருப்பதால் விளையாட்டுத்துறையில் ஊழல் புகுந்துள்ளது. பெயரளவில் செயற்படும் சங்கங்களில் உள்ள அங்கத்தவர்கள் விளையாட்டுத்துறைக்காக உழைக்கவில்லை. மாறாக விளையாட்டுத்துறை சங்க தலைவர்கள் உட்பட நிருவாகிகளை நியமிக்க மட்டும் வாக்களிக்க வருகிறார்கள். பிள்ளைகளுக்கு எதுவும் செய்யவில்லை. இந்த நிலைமையை மாற்றவே புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.
‘புதிய சட்டவிதிகளின் பிரகாரம் சங்கங்களில் பிரதான பதவியில் இருக்கும் ஒருவரின் அதிகபட்ச பதவிக்காலம் 4 வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவைத் தலைவரின் பதவிக் காலம் 2 வருடங்களாகும். மேலும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓய்வு பெற வேண்டும், இரட்டை குடியுரிமை உடையவர்கள் பதவி வகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. பொருளாளர் பதவி மற்றும் நிதி விடயங்களுக்கு கணக்காய்வு தகுதிகள் அவசியம் என புதிய விளையாட்டுத்துறை சட்ட விதிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
‘சிலர் மரணபரியந்தம் தங்கள் பதவிகளில் இருக்க முயற்சி செய்கிறார்கள். தொழில்புரிவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கிறது. எனக்கு 62 வயது ஆனதும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். பதவியில் நிரந்தரமாக இருக்க முடியாது. விளையாட்டுத்துறை சங்கங்களுக்கும் இது பொருந்தும். ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் 70 வயதை எட்டியதும் பதவி விலக வேண்டும். நமது பொதுப்பணித்துறையில் தொழில்புரியும் காலம் 60 ஆண்டுகள் ஆகும். நீதிபதிகள் ஓய்வுபெற வேண்டிய வயது எல்லை 65 ஆகும். எனவேதான் எனக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் படி விளையாட்டுத்துறை சங்கங்களில் நிருவாகிகளின் பதவி வகிப்பதற்கான வயது எல்லையை 70ஆக ஆக்கினேன். ஒரு சிலர் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து நியாயம் கோரி நீதிமன்றம் சென்றுள்ளனர். அவர்கள் நீதிமன்றம் செல்வதற்கான உரிமையை நான் மதிக்கிறேன். ஆனால், இந்த நாட்டில் வாழும் 22 மில்லியன் மக்களின் உரிமைகளை நான் பாதுகாக்கவேண்டும். குறிப்பிட்ட சிலரின் அடிப்படை மனித உரிமைகளை அல்ல. எனவே என்னால் ஆன சகலதையும் செய்வேன். மேலும் எமது விளையாட்டுத்துறை சங்கங்களில் பதவி வகிக்கும் நிர்வாகிகள் அனைவரும் கள்வர்கள் அல்லர். சிலர் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கிறார்கள். அத்தகையவர்களை நாம் பாதுகாப்பது அவசியம்’ என்றார்.
‘விளையாட்டுத்துறை சட்டம் அல்லது அந்த சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்ட குழுவினால் அல்லது சர்வதேச சங்கம் அல்லது அதனுடன் இணைந்த சங்கம் ஆகியவற்றினால் நடத்தப்பட்ட விசாரணைகளில் ஒழுக்க விதி மீறல் காரணமாக நிருவாக உத்தியோகத்தர் ஒருவர் அல்லது செயற்குழு உறுப்பினர் ஒருவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தால் அல்லது தண்டிக்கப்பட்டிருந்தால் அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தால் அத்தகைய நபர் எந்தப் பதவிக்கும் போட்டியிட தகுதியற்றவர் என புதிய விளையாட்டுத்துறை சட்டவிதிகளில் பரிந்துறைக்கப்பட்டுள்ளது’ என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதற்கு அமையவே இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலில் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் போட்டியிடுவதற்கு தடை விதித்ததாக அமைச்சர் கூறினார்.
‘ஜஸ்வர் எந்தவொரு விளையாட்டுத்துறை சங்கத்திலும் எந்தவொரு பதவியையும் வகிக்க தகுதியற்றவர் என கோப் குழுவினர், விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய தவறுகளைத் தடுக்கும் விசேட விசாரணைப் பிரவினர், இலங்கை காலப்நதாட்ட சம்மேளனத் தேர்தல் மேன்முறையீட்டுக் குழுவினர் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டதன் காரணமாகவே ஜஸ்வருக்கு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை’ என அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், ‘இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் 2023 ஜனவரி மாதம் 14ஆம் திகதி நடைபெற்றது. ஆனால், இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சலைப் பயன்படுத்தி, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என பீபாவுக்கு ஜஸ்வர் கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், தேர்தல் குழு அப்படி கூறவில்லை’ என ஊடக சந்திப்பில் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்திற்கு பீபாவினால் விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை நீக்குமாறு பீபாவிடம் கோரியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அது குறித்து கலந்துரையாட பீபா அதிகாரிகள் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவித்தார்.