விண்வெளிக்குப் பயணிக்கும் சவுதியின் முதல் பெண்!

82 0

சவுதி அரேபியா முதல்முறையாக பெண் விண்வெளி வீராங்கனை ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.

சவுதி அரேபியா அரசு கடந்த ஆண்டு விஷன் 2030 என்ற விண்வெளித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்காக விண்வெளி வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் சவுதி அரேபியாவுக்கும், ஐக்கிய அமீரகத்துக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக போட்டி தொடர்ந்து வருகிறது. மேலும், பெண்களுக்கு எதிரான அடக்குமுறையை கொண்ட நாடு சவுதி என்ற பழைய அடையாளத்தையும் அழிக்க சவுதி தொடர்ந்து முயன்று வருகிறது.

இந்த நிலையில், விண்வெளிக்கு முதல் முறையாக விண்வெளி வீராங்கனையை சவுதி அரேபியா அனுப்ப உள்ளது.இதனை சவுதி அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து சவுதி அரசு ஊடகம் தரப்பில், “2023-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) செல்லும் சவுதி விண்வெளி வீரர் அலி அல்-கர்னியுடன் சவுதியின் விண்வெளி வீராங்கனையான ரய்யானா பர்னாவி பயணிக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் ஓட்டத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தன. ஆனால், சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான் ஆட்சிக்குப் பின் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இவர் சமீபத்தில் பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்தார். பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சவுதி பெண் ஒருவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல இருக்கிறார்.