பாகிஸ்தானில் உள்ள தூதரக அலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதாக சீனா அறிவிப்பு

75 0

 பாகிஸ்தானில் உள்ள தூதரக அலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதாக சீனா அறிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ள சீனா, தொழில்நுட்ப காரணங்களுக்காக தூதரகத்தில் உள்ள தூதரகப் பிரிவை மூடுவதாகத் தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப காரணங்கள் குறித்து விளக்கம் அளிக்காததோடு, மறு அறிவிப்பு வரும் வரை தூதரகப் பிரிவு மூடப்பட்டிருக்கும் என்றும் அது கூறியுள்ளது.

சீனாவை அரபிக்கடலோடு இணைக்கும் நோக்கில் சீனா – பாகிஸ்தான் பொருளாதார பாதை எனும் திட்டத்தை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. 65 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த பெருந்திட்டத்தின் மூலம், பாகிஸ்தானின் சாலைகள், ரயில் பாதை, துறைமுகங்கள் ஆகியவை இணைப்பதற்கான நடவடிக்கைகளை சீனா எடுத்து வருகிறது. அதோடு, இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக எரிவாயு குழாய்களையும் அது பதித்து வருகிறது.

ஏராளமான சீனர்கள் பாகிஸ்தானிற்குச் சென்று இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், இந்த திட்டத்திற்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பாகிஸ்தானில் உள்ள சீனர்களை குறிவைத்து தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன.

கராச்சியில் ஆசிரியராக பணியாற்றி வந்த 3 சீனர்கள் தற்கொலைப் படைத் தாக்குதல் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரலில் கொல்லப்பட்டனர். பெண் ஒருவர் இந்த தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியது விசாரணையில் தெரிய வந்தது. ஆப்கனிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தலிபான்கள், பாகிஸ்தானிலும் வலுவடைந்து வருகின்றனர். இவர்கள் பாகிஸ்தான் தலிபான்கள் என தனி பிரிவாக இயங்கி வருகிறார்கள். இதனால், கடந்த ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

தற்போது பாகிஸ்தான் பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால், பயங்கரவாத அமைப்புகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தானில் உள்ள சீனர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு சீனா கடந்த வாரம்தான் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், அந்நாடு பாகிஸ்தானில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூடி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.