2018-ல் தாய்லாந்து குகையில் சிக்கி 18 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட சிறுவன், 4 வருடங்களுக்குப் பிறகு உடல் நலக்குறைவால் இறந்தார்.
2018-ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நடந்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம்.சியாங்ராய் மாகாணத்தில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10 கி.மீ. நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப் பெரிய குகையாகும். தாய்லாந்து – மியான்மர் எல்லையில் இந்தக் குகை அமைந்துள்ளது. சியாங்ராய் மாகாணத்தைச் சேர்ந்த வைல்டு போர் எனும் 11 வயது முதல் 16 வயது கொண்ட கால்பந்து அணியைச் சார்ந்த சிறுவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி இந்தக் குகைக்கு சென்றனர்.
இந்தச் சிறுவர்களுக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் உடன் சென்றிருந்தார். அப்போது, அங்கு பெய்த கடுமையான மழை காரணமாக குகையில் மாணவர்களும், பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டனர். கடும் மழைக்கு இடையே குகையில் சிக்கிய கால்பந்து அணியை சேர்ந்த சிறுவர்கள் 18 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த உணர்வுபூர்வ சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைப்படமும் வெளிவந்தது.
இந்த கால்பந்து குழுவின் கேப்டனாக இருந்த டங் பஜ் தனது கால்பந்தாட்டத்தை கடந்த சில ஆண்டுகளாக மெருகேற்றிக் கொண்டு இருந்தார். அதன் பலனாய் பிரிட்டனில் உள்ள லீசெஸ்டர்ஷையரில் உள்ள புரூக் ஹவுஸ் கல்லூரி கால்பந்து அகாடமியில் டங் பஜ்க்கு கடந்த ஆண்டு இடம் கிடைத்தது. இதனை தாய்லாந்து கால்பந்து அணியினர் மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதுகுறித்து டங் பஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது கனவு நனவாகியது” என பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில், டங் பஜ் ஞாயிற்றுக்கிழமை அவரது ஓய்வறையில் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டங் பஜ் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பெரும் போராட்டத்திலிருந்து உயிருடன் மீண்டு, தனது கனவை நோக்கி பயணித்த டங் பஜ்ஜின் மரணம் தாய்லாந்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.