கனடாவில் இந்து கோயில் சேதம் – காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அட்டூழியம்

91 0

கனடாவில் மிஸ்ஸிசாகா நகரில் உள்ள ராமர் கோயிலை அங்குள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சேதப்படுத்தி உள்ளனர்.

டொரோன்டோ நகருக்கு அருகில் உள்ள நகரான மிஸ்ஸிசாகாவில் மிகப் பெரிய ராமர் கோயில் உள்ளது. அதை சேதப்படுத்திய காலிஸ்தான் பிரிவினைவாதிகள், அந்தக் கோயில் மீது காலிஸ்தானுக்கு ஆதரவான, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி உள்ளனர்.

காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் இந்தச் செயலுக்கு கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மிஸ்ஸிசாகா நகரில் உள்ள ராமர் கோயில் சேதப்படுத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசை கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோயில் நிர்வாகம் தனது ஃபேஸ்புக் பதிவில், “மிஸ்ஸிசாகா நகரில் உள்ள ராமர் கோயில் கடந்த 13-ம் தேதி இரவு சேதப்படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் எங்களை மிகவும் வேதனைப்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள இந்து கோயில்கள் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்துவது இது முதல் முறையல்ல. பிராம்ப்டனில் உள்ள இந்து கோயில் ஒன்று கடந்த ஜனவரியில் சேதப்படுத்தப்பட்டது. இது அங்குள்ள இந்துக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் டொரோன்டோவிலுள்ள சுவாமி நாராயணன் கோயில் சேதப்படுத்தப்பட்டது. இந்தத் தாக்குதல்களின் பின்னணியிலும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப்பை தனிநாடாக மாற்ற வேண்டும் என்றும், அதற்கு காலிஸ்தான் என பெயரிட வேண்டும் என்றும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கோரி வருகின்றனர். கனடா அரசு இவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது, இந்தியப் பிரிவினைக்கு வித்திடும் என்பதால் இந்திய அரசு இதனை கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்நிலையில், கனடாவில் இருந்து இயங்கி வரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள், இந்தியாவுக்கு எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.