அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அன்று காலை 9.30 மணிக்கு,சென்னை ராயப்பேட்டையில் உள்ளகட்சி தலைமை அலுவலக வளாகத்தில் ஜெயலலிதா சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதைசெலுத்துகிறார். கட்சிக் கொடியைஏற்றிவைத்து, நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார். ‘நமது அம்மா’ நாளிதழ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள பிறந்தநாள் விழா சிறப்பு மலரையும் வெளியிட உள்ளார்.
அன்றைய தினம் கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் தங்கள் பகுதியில் ஆங்காங்கே ஜெயலலிதா சிலைகள், படங்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த வேண்டும்.
கண்தானம், ரத்த தானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டு போட்டிகள்நடத்துதல், மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் செய்தல், இலவச திருமணங்கள் நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்களில் வசிப்போருக்கு உணவு வழங்குதல், வேட்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.
புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, டெல்லி, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதுபோல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்க உள்ளது.இதில் அதிமுகவின் வெற்றிக்காக கட்சி நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
இடைத்தேர்தல் பணிகள் முடிந்தபிறகு, மார்ச் 5, 6, 7, 10, 11, 12ஆகிய 6 நாட்களில் ஜெயலலிதாபிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறும். அதுதொடர்பான பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.