தேர்தல் விவகாரம் : திறைசேரியின் செயலாளர், நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல்

88 0

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நிதி விடுவிப்பு தொடர்பில் திறைச்சேரியின் செயலாளர், நிதியமைச்சின் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை (16) முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.

பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியேதும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் தனித்து உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த முடியாது. தேர்தல் செயற்பாடுகளுக்கு சகல அரச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசியலமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ளதை சகல அரச தரப்பினருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன் எனவும் சுட்டிக்காட்டினார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பை எதிர்வரும் 22,23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடத்த எதிர்பார்த்துள்ளோம்.

தவிர்க்க முடியாத மற்றும் ஆணைக்குழுவின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளினால் தபால்மூல வாக்கெடுப்பிற்கான வாக்குச்சீட்டுக்களை புதன்கிழமை (15) விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தபால்மூல வாக்கெடுப்புக்கான வாக்குச்சீட்டு அட்டைகளை இவ்வார காலத்திற்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த அரசியலமைப்பிற்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் நிதி நெருக்கடியால் ஒருசில செயற்பாடுகள் தாமதப்படுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் திறைச்சேரியுடன் இன்று விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்.

மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வற்கு 300 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் அண்மையில் எழுத்துமூலமாக அறிவித்த நிலையில் 100 மில்லியன் ரூபா மாத்திரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மாத்திரம் தனித்து செயற்பட முடியாது,தேர்தல் ஒன்றை நடத்த அனைத்து அரச நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசியலமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ளதை சகல அரச நிறுவனங்களும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஊள்ளு உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தும் பணிகளுக்கு தோற்றம் பெற்றுள்ள நெருக்கடிகளுக்கு பொறுப்பான தரப்பினருடன் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம். பேச்சவார்த்தை சாதகமாக அமையாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவதை தவிர மாற்று வழியேதும் இல்லை என்றார்.