உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக கொண்டு முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தை எதிர்வரும் 24ஆம் திகதி அநுராதபுரம் நகரில் நடத்த பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
நிலையான அமைச்சரவையை ஸ்தாபித்தல் மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கல் தொடர்பில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளார்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (14) நெலும் மாவத்தையில் உள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.
தற்போதைய அரசியல் நிலைவரம், கட்சி மீள்மறுசீரமைப்பு தொடர்பில் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதயகம்மன்பில, ஜி.எல்.பீரிஸ், டலஸ் அழகபெரும உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக கட்சி மட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பஷில் ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்படும் விமல், டலஸ் அணியினருக்கு எதிராக கட்சி மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் வாரமளவில் உறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும். ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பான அறிவிப்பு சுயாதீன தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் ஜி.எல். பீரிஸை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்கி, அப்பதவியை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கு வழங்குமாறு ஆளும் தரப்பினர் இதன்போது யோசனை முன்வைத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நிலையான அமைச்சரவையை ஸ்தாபித்தல், பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கல் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ஆளும் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தயாராகுமாறு பஷில் ராஜபக்ஷ ஆளும் தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காக கொண்டு முதலாவது தேர்தல் பிரசார கூட்டத்தை எதிர்வரும் 24ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களின் கண்காணிப்பின் கீழ் மாவட்ட மட்டத்தில் தேர்தல் பிரசார கூட்டங்களை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.