ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்வரும் 12 ஆண்டுகள் நாட்டை ஆளும் அதிகாரத்தை மக்கள் வழங்கினால் இலங்கை ஆசியாவிலும் , உலகிலும் பலம் மிக்க நாடாக உயர்வடையும்.
மக்கள் அறிவுடன் சிந்தித்து செயற்படுவார்களாயின் இந்த மாற்றம் நிச்சயம் இடம்பெறும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது எம்மால் வழங்கப்பட்ட எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பான துண்டு பிரசுரங்களில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான பாதை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்தோடு 2015 இல் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட பயணத்தை மாற்ற வேண்டாம் என்றும் , அவ்வாறு மாற்றினால் நாடு வீழ்ச்சியடையும் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம்.
திறைசேரியில் 3 பில்லியன் டொலர் கையிருப்புடனேயே அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைக் கையளித்தார்.
இன்று இந்தியா உலகில் பாரிய வளர்ச்சியடைந்துள்ள நாடாகியுள்ளது. இந்தியாவிடம் 400 பில்லியன் டொலர் நிலையான கையிருப்பு காணப்படுகிறது. உலகில் அந்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது.
ஆனால் இலங்கை மக்கள் என்ன செய்தனர்? 3 பில்லியன் டொலர் இருப்பை பேணிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அரசியலிலிருந்து ஒதுக்கினர்.
அவர் ஜனாதிபதியாவதற்கு முன்னர் நாம் இது தொடர்பில் அவரிடம் வினவிய போது , நாம் சென்ற பாதையை மாற்றினால் 2023இல் மீண்டும் எமக்கு நாட்டை கட்டியெழுப்ப வேண்டியேற்படும் என்று குறிப்பிட்டார். எனினும் 2022 இலேயே அந்த பொறுப்பினை ஏற்க வேண்டியேற்பட்டுள்ளது.
இலங்கை மக்கள் அறிவுடன் சிந்தித்து எதிர்வரும் 12 ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்யும் அதிகாரத்தை மக்கள் அவருக்கு வழங்கினால் ஆசியாவிலும் , உலகிலும் பலம் மிக்க நாடாக நாட்டை உயர்த்துவார்.
இலங்கையை முட்டாள்களே ஆட்சி செய்ய வேண்டும் என்று சர்வதேசம் எண்ணக்கூடும். இலங்கை ஆசியாவில் வளர்ச்சியடைந்த நாடாகிவிடக் கூடும் என்பதே இவ்வாறான எண்ணத்திற்கான காரணமாகும். எனவே தான் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை சர்வதேசம் கூட சில சந்தர்ப்பங்களில் விரும்புவதில்லை என்றார்.