நாட்டின் எதிர்காலத்திற்காக தயாரிக்கப்பட்டுள்ள பொருளாதார வேலைத்திட்டத்தினை சர்வதேச நாணய நிதியத்திடமும் சமர்ப்பித்துள்ளோம்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்ற போதிலும் , அதன் சகல நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
உலகப் பொருளாதாரத்தில் இலங்கை அங்கத்துவம் வகிக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். அவ்வாறு செய்தால் மாத்திரமே டொலர் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும். உலகில் ஒரு பங்காளியாகவே இலங்கையைக் கட்டியெழுப்ப முடியும். எமது இந்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்.
அரச நிறுவனங்களின் செலவுகளைக் கட்டுப்படுத்தல் , இலங்கை விமானசேவை போன்றவற்றை தனியார் மயப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை எமது பொருளாதார திட்டத்தில் உள்ளடக்கியுள்ளோம். அத்தோடு தனியார் நிறுவனங்களுக்கு முதலீட்டு வாய்ப்புக்கள் அதிகரிக்க வேண்டும்.
மேலும் மீள் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி துறையை மேம்படுத்துவதில் அவதானம் செலுத்த வேண்டும். மீள் புதுப்பிக்கத்தக்க மின் சக்தி மூலம் அதிகளவு டொலர் வருமானம் ஈட்டும் நாடுகளுக்கு சிறந்த உதாரணம் பூட்டான் , நேபாளம் என்பனவாகும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அதன் அனைத்து நிபந்தனைகளையும் அங்கீகரிக்க முடியாது.
சர்வதேச நாணய நிதியம் நாட்டின் அரசியல் நிலைவரம் தொடர்பில் கவனத்தில் கொள்ளாது. ஆனால் ஸ்திரமான அரசாங்கம் இருந்தால் தொடர்ந்தும் பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாடு என்ன என்பது தொடர்பில் இன்னும் எமக்குத் தெரியாது. அதனை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிதி பற்றிய குழுவிற்கு மீண்டும் அதே உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டால், இது தொடர்பான நடவடிக்கைகளை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வோம்.
சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ள வரிக்கொள்கையை ஒருபோதும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. சுமார் 4 – 5 இலட்சம் மாத வருமானம் பெறுவர்களுக்கு கூட 52 சதவீத வரியை அறவிட முடியும்.
அதற்கான மாற்று வேலைத்திட்டம் எம்மிடமுள்ளது. எமது இந்த பொருளாதார வேலைத்திட்டத்தை நாம் சர்வதேச நாணய நிதியத்திடமும் சமர்ப்பித்துள்ளோம். எமது வேலைத்திட்டங்களுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டால் தொடர்ந்தும் பயணிக்க முடியும் என்றார்.