உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பிற்கான வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டதை தொடர்ந்தே அரச அச்சகத் திணைக்களம் தமது பணிகளை இடைநிறுத்தியுள்ளது.
தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டாம் என ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கிறார். ஜனநாயகத்திற்கு முரணான இந்த செயற்பாட்டை ஏற்றுக் கொள்வதா, இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2022 ஆம் ஆண்டு இடம்பெற வேண்டிய உள்ளுராட்சிமன்றத் தேர்தலை முன்னாள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் ஒருவருட காலத்திற்கு பிற்போட்டார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலை தம்மை தெரிவு செய்த 134 உறுப்பினர்களை மகிழ்விக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட ஆரம்பத்தில் இருந்து மேற்கொண்டுள்ளார்.
பாராளுமன்றத்தின் ஊடாக உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட ஜனாதிபதி மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி தேர்தல் வாக்கெடுப்பிற்கு தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தபால் மூல வாக்கெடுப்பு எதிர்வரும் 22,23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இரண்டு தேர்தலை நடத்துவதற்கு தேவையான கடதாசி மற்றும் மை ஆகிய மூல பொருட்கள் அரச அச்சகத் திணைக்களத்திடம் உள்ள நிலையில் நிதி இல்லை ஆகவே வாக்குச்சீட்டு அச்சிட முடியாது என அச்சகத் திணைக்கள தலைவர் கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
தபால் மூல வாக்களிப்பிற்கு 6 இலட்சத்திற்கும் அதிகமானோர் தகுதி பெற்றுள்ளார்கள்.திருகோணமலை மாவட்டத்திற்கு தேவையான வாக்குசீட்டுகள் அச்சிடல் நிறைவுப் பெற்றுள்ளன.
சுமார் 3 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் அரசியல் அழுத்தங்களினால் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்தியாவசிய தேவைகளுக்கு நிதி விடுவிப்பு தொடர்பில் நிதியமைச்சர் ரணில் விக்கிரமசிங்க திறைச்சேரியின் செயலாளருக்கு ஆலொசனை வழங்கியுள்ளார்.
அதில் தேர்தல் நடவடிக்கை உள்ளடக்கப்படவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமஙிக் இந்த தேர்தலில் படுதோல்வி அடைவது உறுதி என்பதால் தேர்தலை அவர் அத்தியாவசிய தேவையாக கருதவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் திறைச்சேரியின் செயலாளர்,சட்டமாதிபர், அரச அச்சகத் திணைக்கள தலைவர் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி அரச அச்சகத் திணைக்கள தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.இதனை தொடர்ந்தே வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என ஜனாதிபதி அரச அதிகாரிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்கிறார். நாட்டின் அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு,ஆனால் அவர் அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படுகிறார். இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு இடமளிப்பதா, இல்லையா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும். தான் தேர்தலில் வெற்றிப்பெறுவதாக இருந்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசி;ங்க தேர்தலை நடத்துவார், அவ்வாறாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருக்கும் வரை எந்த தேர்தலையும் அவர் நடத்த போவதில்லை என்றார்.