தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பது மூன்று வருடகால சிறை தண்டனைக்குரிய குற்றம் என்பதை அரச அதிகாரிகள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு 400 மில்லியன் ரூபாவை கோரும் அரச அச்சகத் திணைக்களம் சுதந்திர தினத்திற்கான செலவுகளை ஏன் கோரவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கேள்வியெழுப்பினார்.
நாவல பகுதியில் உள்ள சுதந்திர மக்கள் சபையின் காரியாலயத்தில் புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திடமிருந்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது பெரும் போராட்டமாக உள்ளது.
இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் மக்களாணையுடன் அரசாங்கம் ஒன்று தோற்றம் பெற வேண்டும்.
நாட்டு மக்கள் தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்வத்கு ஜனாதிபதி இடமளிக்க வேண்டும், தடையாக இருக்க கூடாது.ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் படுதோல்வியடைவது உறுதி.
அரசியல் பின்னடைவை தவிர்த்துக் கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளுராட்சிமனற்த் தேர்தலை பிற்போட முறையற்ற வகையில் செயற்படுகிறார்.
தேர்தல் ஒன்றை நடத்தும் போது அரச நிறுவனங்களுக்கு ஒரே கட்டமாக நிதி ஒதுக்கப்படுவதில்லை.கட்டம் கட்டமாகவே நிதி ஒதுக்கப்படும்.வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கு தேவையான 400 மில்லியன் ரூபாவை வழங்குமாறு அரச அச்சகத் திணைக்களம் தேர்தல்கள் ஆணைக்குழவிற்கு அறிவுறுத்தியுள்ளது.
நிதி நெருக்கடியினால் வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை அரச அச்சகத் திணைக்களம் இடை நிறுத்தியுள்ளது.நாடு வங்கரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் 75 ஆவது சுதந்திர தினம் பல கோடி ரூபா செலவில் கொண்டாடப்பட்டது.
சுதந்திர தினத்திற்கு அரச அச்சக திணைக்களம் செலவு செய்த நிதியை திறைச்சேரி முழுமையாக வழங்கியதா என்பதை அரச அச்சகத் திணைக்கள தலைவர் கங்கானி லியககே குறிப்பிட வேண்டும்.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரச அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசியலமைப்பின் 104 ஆவது உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பது 3வருட கால சிறை தண்டனைக்குரிய குற்றம் என்பதை அரச அதிகாரிகள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.