சகல அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் – டலஸ் அழைப்பு

161 0

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன மக்களாணைக்கு எதிராக செயற்பட்டதால் நாட்டில் ஏற்பட்ட அழிவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளை முறியடிக்க சகல அரசியல் கட்சிகளும் ஒன்றுப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சிகள் மற்றும் சுயாதீன தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

சுதந்திர தேசிய முன்னணி காரியாலயத்தில் புதன்கிழமை (15) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் 21 தடவைகள் முயற்சித்துள்ளது. அரசாங்கத்தின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் தேர்தல் வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகளை இடைநிறுத்தி தேர்தலை பிற்போடும் புதிய முயற்சியை அரசாங்கம் தற்போது வகுத்துள்ளது.

வாக்குச்சீட்டு அச்சிடல் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் தபால் மூல வாக்களிப்புக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மக்களாணைக்கு முரணாக செயற்படும் அரசாங்கத்தின் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தலை நடத்த அரசாங்கத்திடம் நிதி இல்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்,உண்மை என்னவென்றால் அரசாங்கத்திற்கு வாக்கு இல்லை அதனால் அரசாங்கம் தேர்தலை பிற்போட முயற்சிக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன ஜனநாயகத்திற்கு எதிராக செயற்பட்டதால் நாட்டில் இரத்த வெள்ளம் ஓடியது,அரசாங்கத்தின் தேவைக்காகவே அக்காலப்பகுதியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகள் நாட்டில் ஏற்படுத்திய அழிவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு அழைப்பு விடுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.நாட்டு மக்களின் அடிப்படை தேர்தல் உரிமைகளை பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது அரசியலமைப்பிற்கு முரண் என்பதை அரசாங்கம் அறியாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது என்றார்.