அரசியலமைப்பிற்கு அமைவாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது நிறைவேற்றுத்துறையின் பொறுப்பாகும்.
தேர்தலை நடத்துவதற்குரிய அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு அனைத்து அரச நிறுவனங்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை மீறுவதாகவே அரச அச்சகத்தின் செயற்பாடு அமைந்துள்ளதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கடமைகளை செய்ய மறுத்தல் அல்லது தவறுதல் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால் , அரச அச்சகத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தேர்தல் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பு கால வரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை குறித்து நாம் அவதானம் செலுத்தியுள்ளோம்.
அச்சிடப்பட்ட தபால் மூல வாக்குச்சீட்டுக்களை உரிய வேளையில் தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளிப்பதற்கு அரச அச்சகம் மறுப்பு தெரிவித்தமையே இதற்கு காரணம் என அறியக்கூடியதாகவுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவானது வாக்கு சீட்டுக்களை அச்சிடுவதற்கான மொத்த தொகையையும் செலுத்தும் வரை வாக்குசீட்டுக்களை அச்சிடும் சென்முறையை தொடர இயலாது என அரச அச்சகத்தினால் கடந்த திங்களன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடன் அடிப்படையில் சேவைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டாம் என கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி அரச நிறுவன தலைவர்களுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 9ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதில் தபால் மூல வாக்கெடுப்பிற்கு ஏற்பட்டுள்ள இவ்விடையூறு தாக்கம் செலுத்தும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் நம்புகிறது.
அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகள் வாக்காளர்கள் மத்தியில் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துவதுடன் இலங்கையின் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அனைத்து பிரஜைகளினதும் வாக்களிக்கும் உரிமையை நேரடியாக மீறுவதாக இது அமைகின்றது.
அதே வேளை அரசியலமைப்பிற்கு அமைவாக உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவது நிறைவேற்றுத்துறையின் பொறுப்பாகும் என முன்னிலைப்படுத்துகின்றோம். தேர்தலை நடத்துவதற்குரிய அனைத்து சட்டங்களையும் அமுல்படுத்துவதற்கு , அனைத்து அரச நிறுவனங்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசியலமைப்பின் 104பீ(2)ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மீறுவதாகவே அரச அச்சகத்தின் இந்த செயற்பாடானது அமைந்துள்ளது.
இக்கடமைகளை செய்ய மறுத்தல் அல்லது தவறுதல் அரசியலமைப்பின் 104புபு பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். குறித்த பிரிவின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி அரச அச்சகம் மற்றும் செயன்முறைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வேறு எந்த பொது அல்லது அரச நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவினை வலியுறுத்துகின்றோம்.