இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

98 0

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்படும் மேலதிக நடவடிக்கைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த காலாண்டு முடிவடைவதற்குள் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் ஆரம்பகட்ட பணிகள் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய இருதரப்பு வர்த்தக பெறுமதியை 550 மில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

தாய்லாந்து வர்த்தக உடன்படிக்கை ஏற்கனவே நீண்டகாலமாக தாமதமாகியுள்ளது. சுற்றுலாத்துறை, வெளிநாட்டு முதலீடு மற்றும் சர்வதேச சந்தையை வெல்வதற்கு இந்த வர்த்தக உடன்படிக்கை சிறந்த வாய்ப்பாக அமையும்.

அதன்படி, அதன் முதலாவது கட்ட பேச்சுவதர்த்தை 2018 ஜூலை மாதத்திலும், இரண்டாவது கட்ட கலந்துரையாடல் 2018 செப்டம்பர் மாதத்திலும் தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நடைபெற்றது.

அதன் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி மாதம் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெற்றதுடன், அந்த கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவையில் தெளிவுபடுத்தியதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.