ஹபரனை டீப் ஜங்கிள் இசை கலாச்சார விழா;வனவிலங்குகளை பாதிக்கக்கூடும் உடன் ரத்து செய்யுங்கள்

114 0

எதிர்வரும்  17 முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஹபரனை,  கல்லோயா வனப் பகுதிக்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள டீப் ஜங்கிள் (Jeep Jungle) இசை மற்றும் கலாச்சார விழாவினால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வழித்தடமாக இருப்பதால் அதிக ஒலி அளவுகள் அப்பகுதியில் உள்ள வன விலங்குகளை கடுமையாக பாதிக்கக் கூடும்.

மேலும் இதன் மூலம் ஏற்படக்கூடிய  ஆபத்துக்களை அறிந்து அதனை உடனடியாக இரத்து செய்து சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மற்றுமொரு பகுதிக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுற்றுச்சூழலுக்கான மையத்தின் தலைவர் ஹேமந்த விதானகே தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஹபரணையில் உள்ள பிரசித்தி பெற்ற யானைகள் சரணலாயம் கல்ஓயா சரணலாயமாகும். அதாவது கவுடுல்ல மற்றும் மின்னேரியா தேசிய பூங்காக்களுடன் இணைக்கும்  அண்மித்த பகுதியில் அரசாங்கத்தின் குறிப்பிட்ட சில தரப்பினரின் அனுமதியுடன்  டீப்  ஜங்கிள் தனியார் நிறுவனத்தினால்  இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

அதேவேளை இலக்கம் 2031 2007 எனும் பொலிஸாரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையில் ஒலி எழுப்பும் சாதனைங்களைப் பயன்படுத்துவதை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இச் சட்டங்களை மீறி இவ்வாறு நிகழ்வு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி காரியாலயம் பிரதமர் அலுவலகம்  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் மற்றொரு தரப்பினரின் அனுமதி பெற்று இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வன பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

பிரகாசமான ஒளி விளக்குகள் மற்றும் இலத்திரனியல் ஒலிப்பெருக்கி உபகரணங்கள்  வன விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கலாம். இதன் காரணமாக அச்சமடையும் யானைகள் புகையிரதங்களில் மோதலாம் அல்லது குடியிருப்புகளில் நுழைந்து உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் சேதம் விளைவிக்கும்.

மேலும் குறித்த களியாட்ட நிழ்வு நடைபெறுமானால் அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளுக்கு ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் முழுப்பொறுப்பேற்க வேண்டும். இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான அனுமதியை உடன் இரத்து செய்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வேறு இடத்திற்கு இதனை மாற்ற வேண்டும்.

நாட்டில் வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் செயற்படுத்தும் போது பொலிஸாரின் சுற்றறிக்கை மற்றும்  சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதீப்பீட்டின் உத்தரவுகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவேண்டும். இருப்பினும் அதனை சட்ட வரையறைகளை  மீறி மேற்கொள்ளப்படும் எந்த ஒரு செயற்பாடும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.