மது போதையில் வாகனம் ஓட்டியதாக சென்னையில் 3 வாரங்களில் ரூ.2.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களைக் குறைக்க உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை போக்குவரத்து போலீஸார் வசூலித்து வருகின்றனர். அதன்படி, மது போதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
அபராதத் தொகை அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர். அவர்களிடம் கண்டிப்புடன் அபராதம் வசூலிக்க 10 இடங்களில் அழைப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கடந்த 3 வாரங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 2,521 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.2 கோடியே61 லட்சத்து 21,500 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் கூறுகையில், “மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துகள் உட்பட பறிமுதல் செய்யப்படும். ஏற்கெனவே இதுபோன்று மது போதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துகளைப் பறிமுதல் செய்வதற்கு இதுவரை 340 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறைப்படுத்த செயல்பாட்டில் உள்ளது” என்றனர்.