ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதாக தலைமை தேர்தல் ஆணையத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் அளித்த பின்னர், செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் தொடர்பாக கடந்த 3-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தோம். அந்த தொகுதியின்வாக்காளர் பட்டியலில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்திருந்தோம்.
அது தொடர்பாக ஆய்வு செய்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பட்டியல் அளிக்கும்படி கேட்டிருந்தனர். இதையடுத்து, தொகுதியில் உள்ள 238 வாக்குச்சாவடிகளிலும், வீடுவீடாக ஆய்வு மேற்கொண்டு, பட்டியல் தயாரித்து, தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளோம்.
இந்த தேர்தலில் ஆளும் திமுக அரசு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்வேறு அராஜகங்களை நிறைவேற்றி வருகிறது. எனவே, வாக்குப்பதிவு முறையாக நடைபெற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தொகுதியை துணை ராணுவ கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் விசாரணை அறிக்கை கேட்டிருப்பதாகவும், அறிக்கை வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சி.வி.சண்முகம் கூறினார்.