நியாயமற்ற வரிக்கொள்கை : தொழில் வல்லுநர்கள், தொழிற்சங்கம் கூடி முக்கிய தீர்மானம் எடுக்கவுள்ளன !

106 0

ரசாங்கத்தின் வரி திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள், தொழிற்சங்கங்கள் திங்கட்கிழமை (13) ஒன்றுகூடி முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளன.

மேலும், நிறைவேற்றுக்குழு மற்றும் மத்திய குழு கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) மற்றும் புதன்கிழமை (15) கூட்டப்பட்டு, வரிக்கொள்கை தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் வரி திருத்தச் சட்ட மூலத்தை மாற்றியமைக்கவில்லை என்றால் தமது போராட்டங்கள் தீவிரமடையும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

தற்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் நியாமற்ற வரிக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக முன்னெத்து வருகிறது.

அண்மையில் கொழும்பு 2 ஹைட் பார்க்கில்  அனைத்து தொழிற்சங்கங்களை  பிரதிநிதித்துவப்படுத்தும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்து எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.

அதே நாள் மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தது. இருப்பினும், அன்று அத்தியாவசிய மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளுக்கான சேவைகள் மாத்திரமே இடம்பெற்றிருந்தன.

அத்துடன் ஏனைய தொழிற்சங்களும் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தன.

எனினும், அரசாங்கம் இந்த விடயங்கள் தொடர்பாக சாதகமான பதில்கள் எதையும் வெளிப்படுத்தவில்லை.

இருப்பினும், நிதியல்லா நன்மைகளை பெறுகின்ற அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட சில சலுகைகளை மாத்திரம் வழங்கியிருக்கிறது.

அதாவது நிதியல்லா நன்மைகளை சொற்ப  அளவான தரப்பினரே பெற்றுக்கொள்ளக்கூடியவர்களாக காணப்படுகிறார்கள்.

இந்நிலையில் எமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து இதுவரையில் எதுவித பதில்களும் கிடைக்கப்பெறவில்லை.

ஆகவே, எமது எதிர்கால நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்பதை கூறிக்கொள்கிறோம்.

மேலும், இந்த விடயம் தொடர்பில் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பானது நாளை கூடி எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றப் போகும் நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளது.

அரசாங்கம் எமது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கும் விதமாகவும் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாகவும் அதில் கலந்துரையாடவுள்ளோம்.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை காலை நிறைவேற்றுக் குழு கூட்டத்தையும், எதிர்வரும் புதன்கிழமை காலை மத்திய குழு கூட்டத்தையும் கூட்டவுள்ளது.

இந்நிலையில் இந்த நிறைவேற்றுக் குழு கூட்டம் மற்றும் மத்திய குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் தீர்மானங்களுக்கு அமைவாக நாம் செயற்படவுள்ளோம்.

மேலும், நியாயமற்ற வரிக் கொள்ளைக்கு எதிராக எமது நடவடிக்கைகள் தீவிரமடையும்.

நியாயமான கொள்கைகளுக்கு அரசாங்கம் நிச்சயம் செவிசாய்த்து வரிக்கொள்கையை மீள திருத்தியமைத்து, முறையான வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.

மேலும், நாம் மேற்கொள்ளும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கும் மக்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றார்.