அரசாங்கமும் நிதி அமைச்சரும் நிதியை வழங்கி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்: ரோகன ஹெட்டியாராச்சி

131 0

மக்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்ற இந்த அரசாங்கமும் நிதி அமைச்சரும் நிதியை வழங்கி தேர்தலை நடத்த முன்வர வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்ற பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தல் கண்காணிப்பு தொடர்பாக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் தங்களது கண்காணிப்பு பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (11.02.2023) மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் எதிர்கொள்ளவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாரை மாவட்டங்களில் கடமையாற்றவுள்ள எமது குழுவினருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தோம். அதே போன்று அம்பாறை மாவட்டத்திலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

கிழக்கு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்படும் போது, நாங்கள் எவ்வாறான வகையில் கடமைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக கலந்துரையாடியிருந்தோம்.

விசேடமாக, எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் இடம்பெறவுள்ள தபால் மூலம் வாக்களிப்பு தொடர்பான கண்காணிப்பு கடமைகளில் ஈடுபடுவவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

அதே போன்று தேர்தல் தினத்தில், வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்குகள் எண்ணும் நிலையங்களில் எமது கடமைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ள நிலையில் எமக்கு தெரியும்.

தேர்தல் திணைக்களம் தற்போது தேர்தலை நடாத்துவதற்கான அனைத்து விடயங்களயும் முன்னெடுத்து வருகின்றது. ஆனாலும் அதை நடத்துவதற்கு போதுமான நிதியை நிதியமைச்சு இன்னமும் ஒதுக்கி கொடுக்கவில்லை.

தேர்தல் என்பது இந்த நாட்டின் பிரஜைகளின் உரிமை என்பதால் அந்த உரிமையை நடைமுறைப்படுத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென நாங்கள் இந்த வேளையில் வேண்டுகோளை நிதியமைச்சிற்கும் அதனுடைய செயலாளருக்கும் விடுக்கின்றோம்.

அத்தோடு, தேர்தல் திணைக்களம் கோரியுள்ள 300 மில்லியன் பணத்தினை எதிர்வரும் இரண்டு தினங்களிற்குள் வழங்குவதற்கான ஏற்பாட்டினை மேற்கொள்ளுமாறு நிதியமைச்சிற்கும் அதனுடைய செயலாளருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அவ்வாறாக தேர்தலை நடாத்துவதற்கான நிதியினை வழங்கும் பட்சத்திலேயே தேர்தல் திணைக்களத்தினால் சுதந்திரமான தொரு தேர்தலை நடாத்த முடியுமாக இருக்குமென நம்புகின்றோம்.

இந்த வேளையில், சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், அதனை நடத்துவதற்காக பணத்தினை இன்னும் அரசாங்கம் ஒதுக்குவதில் தாமதமாகவே இருந்து வருகின்றது.

அரசியலமைப்பின்படி சுதந்திரமானதொரு தேர்தலை நடத்துவதற்கு நிதியினை பெற்றுக்கொடுக்கும் வேளையிலேயே அதனை நடத்தி முடிக்க முடியும். நிதியை காரணம் காட்டி மக்களின் உரிமையை மறுக்க முடியாது. தேர்தலை நடாத்துவதற்கான பணத்தை இந்த அரசினால் வழங்க முடியாதெனில் இந்த அரசு தோல்வியடைந்த அரசு எனவே கருத வேண்டியேற்படும்.

நிதியமைச்சின் செயலாளர் மறுப்பாராயின் அவரும் அரசியலமைப்பை மீறுபவராகவே இருப்பார். இந்த அரசின் செயற்பாடுகளை மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமாயின், உடனடியாக தேர்தலை நடாத்துவதற்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும். அத்தோடு தேர்தலை நடாத்துவதற்கு ஜனாதிபதி பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

நான்கு வருடத்திற்கு ஒரு தடவை தேர்தலை நடத்த வேண்டும் என சட்டத்தில் இருந்த போதிலும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு ஒரு வருடம் நீடிக்க அதிகாரம் இருக்கின்றது.

இருந்த போதிலும் தேர்தலை நடத்த நிதி வளம் இருக்கின்றதா? மக்கள் தேர்தலை விரும்புகின்றார்களா என்றெல்லாம் விவாதிக்காமல் தேர்தலை நடாத்த வேண்டும். அவ்வாறே மாகாண சபை தேர்தலை பிற்போட்டு வந்துள்ளார்கள்.

இன்று பார்ப்போமானால் சில மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் அல்லாமல் தனியொரு ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் 5 வருடங்களாக இருந்து வருகின்றது.

அப்படி அல்லாமல் நீதியானதொரு தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கம் நிதியை ஒதுக்கி தேர்தலை நடத்த முன்வர வேண்டுமென அவர் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.