பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி, சிரியாவுக்கு இந்தியா தாராளமாக உதவி செய்து வருகிறது. ‘ஆபரேசன் தோஸ்த்’ என்ற பெயரில் இந்தியாவில் இருந்து மீட்புப் படை வீரர்கள், மருத்துவ குழுவினர் இரு நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.
உத்தர பிரதேசம் ஆக்ராவில் செயல்படும் ராணுவ மருத்துவ மனையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் நூற்றுக்கும் மேற் பட்டோர் துருக்கி சென்றுள்ள னர். இந்திய ராணுவ மருத்துவ குழு, துருக்கியின் ஹதே நகரில் 30 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை அமைத்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
86 மருத்துவ ஊழியர்கள் சேவை
அங்கு இந்திய ராணுவ மருத்துவரான கர்னல் யதுவீர் சிங் தலைமையில் 14 மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 86 மருத்துவ ஊழியர்கள் சேவையாற்றி வருகின்றனர். ஹதே நகர மருத்து வமனையில் பணியாற்றும் இந்திய ராணுவ மருத்துவர் மேஜர் வீணா திவாரி தன்னுடைய தன்னலமற்ற சேவையால் துருக்கி மக்களின் மனங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். இரவு, பகல் பாராமல் முதியோர், சிறாருக்கு அவர் சிகிச்சை அளித்து வருகிறார். இதைப் பார்த்து நெகிழ்ந்த துருக்கி பெண் ஒருவர், மேஜர் வீணா திவாரியின் கன்னத்தில் முத்தமிட்டு தனது நன்றிக் கடனை, அன்பை வெளிப்படுத்தினார். இந்த புகைப்படத்தை இந்திய ராணுவம் நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.