சுவாதியை பேஸ்புக் மூலம் ராம்குமார் தொடர்பு கொள்ளவில்லை என்று வக்கீல் ராம்ராஜ் கூறியிருப்பது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் என்ஜினீயர் சுவாதி கடந்த மாதம் 24-ந் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நுங்கம்பாக்கடம் போலீசார் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 22) என்பவரை கைது செய்தனர். அவர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் முற்போக்கு வக்கீல்கள் அமைப்பை சேர்ந்த வக்கீல் ராம்ராஜ் புழல் சிறைக்கு சென்று ராம்குமாரை சந்தித்தார். அவர் வழக்கு தொடர்பான தகவல்களை சேகரிக்க செங்கோட்டைக்கு நேற்று வந்தார். அங்கு தங்கி உள்ள அவர் மீனாட்சிபுரம் சென்று ராம்குமார் தொடர்புடைய தகவல்களை சேகரித்து வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த முறை இங்கு வந்து ராம்குமார் தந்தை மற்றும் உறவினர்களுடன் பேசினேன். தற்போது மீண்டும் வழக்கு தொடர்பான தகவல்களை சேகரிக்க வந்துள்ளேன். இந்த வழக்கில் பல கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கான விடைகளை தேடி இங்கு வந்துள்ளேன்.
ராம்குமாரின் பேஸ்புக் கணக்கை நான் ஆய்வு செய்தேன். அதில் ராம்குமார் பேஸ்புக் மூலம் சுவாதியை தொடர்பு கொள்ளவில்லை என தெரிகிறது. மேலும் பல விவரங்கள் இந்த வழக்கில் எனக்கு கிடைத்துள்ளன. அவற்றை இப்போது நான் வெளியிட முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
பேஸ்புக் மூலமாகத்தான் சுவாதியுடன் தொடர்பு ஏற்பட்டது என ராம்குமார் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக உள்ள வக்கீல் ராம்ராஜ் பேஸ்புக் மூலம் சுவாதியை ராம்குமார் தொடர்பு கொள்ளவில்லை என கூறியிருப்பது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.