அரசாணைகளை சைகை மொழியில் அறிவிக்கக்கோரி மார்ச் 1ல் போராட்டம்

130 0

அரசாணைகளை சைகை மொழியில் அறிவிக்கக்கோரி வரும் மார்ச் 1ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக காது கேளாத-வாய் பேசாத மாற்றுத் திறனாளிகள் அறிவித்துள்ளனர்.

மதுரையில் இன்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் காது கேளாதோர், வாய்பேசாதோருக்கான தனி கிளை அமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊனமுற்றோருக்கான தேசிய மேடையின் அகில இந்திய செயல் தலைவர் எஸ்.நம்புராஜன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொதுச்செயலாளர் பி. ஜான்சிராணி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்ட விதிகளின்படி அனைத்து அரசு ஆணைகளும், அறிவிப்புகளும் காதுகேளாதோர், வாய்பேசாதோர் அறிந்துகொள்ளும் வகையில் சைகை மொழியில் அறிவிப்பு செய்ய வேண்டும். இச்சட்டம் அமலுக்கு வந்து 6 ஆண்டுகளாகியும் தமிழக முதல்வர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்களின் அறிவிப்புகள், சட்டமன்ற நிகழ்வுகள், முக்கிய உரைகள் சைகை மொழியில் அறிவிப்பு செய்வதை இன்னும் அமல்படுத்தவில்லை. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை தமிழக முதல்வர் வசமிருந்தும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

சைகை மொழியில் அறிவிக்கும் திட்டத்தை அமல்படுத்த வலியறுத்தி மார்ச் 1-ம் தேதி சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள எழிலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும், அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், காவல் நிலையங்களில் சைகை மொழி பெயர்ப்பாளர் நியமிக்கவேண்டும். சென்னை, சேலம், கோவை, மதுரை, தஞ்சை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், மதுரை மாநகர துணை மேயர் டி.நாகராஜ், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பகத்சிங், மாநகராட்சி உறுப்பினர் டி. குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.பாலமுருகன் வரவேற்றார். முடிவில், மாவட்ட தலைவர் பி.வீரமணி நன்றி கூறினார்.