இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திப்பதற்கு உடனடியாக சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்துமாறு இந்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை ஆகியோரிடத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆகியோரே மேற்படி கோரிக்கை விடுத்ததுடன் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதற்கு இந்தியாவின் மேற்பார்வையுடன் பொறிமுறையொன்றை உருவாக்குமாறும் பரிந்துரைத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கும் இடையில் இராப்போசன விருந்துபசாரமொன்று யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதன்போது, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இணை அமைச்சர் முருகன் மற்றும் அண்ணாமலையுடன் உரையாடினார்கள்.
அச்சமயத்தில், சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில், 13ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுலாக்க வேண்டும் என்பது இந்தியாவின் நீண்டகாலக் கோரிக்கையாக உள்ளது.
ஆனால் தற்போது இலங்கையில் அதற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. அதேநேரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் 1987ஆம் ஆண்டு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டதையடுத்து அரசியமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்திற்கும்ரூபவ் தற்போது நடைமுறையில் காணப்படுகின்ற அதன் வடிவங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.