பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட 2 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு நிதியுதவி

116 0

இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 2,44,000 பேருக்கு பெப்ரவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரையான காலப்பகுதியில் அவசியமான நிதியுதவிகளை வழங்க எதிர்பார்த்திருப்பதாக உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னமும் மீட்சியடையாத நிலையில், அதன் விளைவாக உணவுப் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.

அதேவேளை நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்புக்களான உலக உணவுத்திட்டம், உணவு மற்றும் விவசாய அமைப்பு, யுனிசெப் அமைப்பு என்பன உள்ளடங்கலாக பல்வேறு சர்வதேச பொதுக்கட்டமைப்புக்கள் அத்தியாவசிய உதவிகளை வழங்கி வருகின்றன.

அந்த வகையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு தற்போது வரை வழங்கப்பட்டுள்ள உதவிகள் குறித்து உலக உணவுத் திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட தரவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அவ்வறிக்கையில் உள்ள தரவுகளின் பிரகாரம், நாடளாவிய ரீதியில் 37 சதவீதமானோர் உணவுப் பாதுகாப்பின்மை நிலைக்கு முகங்கொடுத்திருப்பதுடன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலக உணவுத் திட்டத்தின் அவசர உதவி வழங்கல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை சுமார் 1.8 மில்லியன் மக்களுக்கு அவசியமான உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, உலக உணவுத் திட்டத்தினால் 1470 மெட்ரிக் தொன் அரிசி நாடளாவிய ரீதியிலுள்ள 7593 பாடசாலைகளுக்கு பகலுணவு தயாரிப்பதற்காக பகிர்ந்தளிக்கப்பட்டது.

அத்துடன் அதன் மூலம் சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான (1,050,714 மாணவர்கள்) பாடசாலை மாணவர்கள் பயனடைந்திருக்கின்றார்கள். அதேபோன்று உலக உணவுத்திட்டத்தினால் வழங்கப்பட்ட சோளம் மற்றும் சோயா உள்ளிட்ட மூலப்பொருட்களை பயன்படுத்தி ஒரு மில்லியனுக்கும் அதிகமான திரிபோஷா பைக்கற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

மேலும், உணவுப் பாதுகாப்பின்மை நெருக்கடி உயர்வாக உள்ள பகுதிகளில் வாழும் 285,776 பேருக்கு அவசியமான உணவுப்பொருட்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலும் 700,000 பேருக்கு எதிர்வரும் மாதங்களில் அவ்வுதவிகள் வழங்கப்படவுள்ளன.

அத்தோடு இவ்வருடம் பெப்ரவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் 244,000 பேருக்கு அவசியமான நிதியுதவிகளை வழங்குவதற்கும் உலக உணவுத்திட்டம் தீர்மானித்திருப்பதுடன் ஏற்கனவே 489,000 பேருக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உதவுவதற்கென இதுவரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், நியூஸிலாந்து, நோர்வே, சுவிற்ஸர்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிடமிருந்து உலக உணவுத்திட்டத்துக்கு 47.5 மில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.