உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி தனக்கான மக்களாணையை பரிசீலித்துக் கொள்ளலாம்

103 0

உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்காவிட்டால் நாட்டு மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோம்.

தமக்கான மக்களாணை எந்தளவில் உள்ளது என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக பரிசீலித்துக் கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற தொழிற்துறை தரப்பினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச வருமானத்தை குறுகிய காலத்தில் அதிகரித்துக் கொள்ள அரசாங்கம் நியாயமற்ற வகையில் வரி கொள்கையால் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

மூல பொருட்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரும்பலான தொழிற்துறையினர் உற்பத்தி நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளார்கள்.

வீழ்ச்சியடைந்துள்ள சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையை மீள்கட்டியெழுப்பும் திட்டங்களை ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடவில்லை.

பிரபல்யமடையும் தீர்மானங்களை எடுக்க போவதில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்,அவரால் பிரபல்யமடையும் தீர்மானங்களை எடுக்க முடியாது,ஏனெனில் அவர் மக்கள் பிரநிதியல்ல,ராஜபக்ஷர்களின் பிரதிநிதி.

பொருளாதார பாதிப்புக்கு அரசியல் மாற்றத்தின் ஊடாக தீர்வு காண முடியாது என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது,தமக்கான அரசாங்கத்தை நாட்டு மக்கள் தெரிவு செய்தால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குவார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்தை மதிக்கிறோம்.ராஜபக்ஷர்கள் தாம் வெற்றிப்பெறும் போது தேர்தலை நடத்துவார்கள்.தோல்வியடையும் சூழல் காணப்படுமாயின் தேர்தலை நடத்தாமல் பிற்போடுவார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைக்க திறைச்சேரி இதுவரை நிதி ஒதுக்கவில்லை.நிதி வழங்காவிடின் நாட்டு மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.