சுதந்திர தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாடி எமது நாடு சிறப்பாகவுள்ளதாக வெளிநாட்டு தூதுவர்களிடமும், இராஜதந்திரிகளிடமும் காண்பித்துக்கொண்டிருக்கும் அதேவேளை, மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.
கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்று வரும் ஊழல் மோசடிகளே இதற்கு காரணமாகும் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது இலங்கை பாரிய நெருக்கடி மிக்க நாடாக காணப்படுகிறது. கடந்த 75 ஆண்டுகளாக இடம்பெற்ற ஊழல் மோசடிகளால் இந்த நிலைமை ஏற்பட்டது.
இலங்கை இன்று பொருளாதார ரீதியில் மாத்திரமின்றி, சகல துறைகளிலும் வீழ்ச்சியடைந்த நாடாக காணப்படுகிறது.
பொருளாதார சீர்குலைவால் மாத்திரமின்றி அனைத்து துறைகளினதும் சீர்குலைவின் காரணமாகவே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது.
எமது மக்கள் சரியான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தயாராக இல்லை. நீதியை போன்றே சரியானவற்றை நடைமுறைப்படுத்துவதை இன்று மக்கள் மறந்துள்ளனர்.
தமக்கு ஏதேனுமொன்று கிடைக்கப் பெறும் என்ற எதிர்பார்ப்பிலேயே அனைத்தையும் நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.
உயர் மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை எவரேனும் ஒருவரிடம் ஏதாவதொன்றை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
பெப்ரவரி 4ஆம் திகதி என்ன சுதந்திர தினத்தை கொண்டாடினோம்?
21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, தேசிய கொடியேற்றப்பட்டு, வீதிகளில் மரியாதை அணிவகுப்புக்களை ஏற்பாடு செய்து, இது சிறந்த நாடு என்பதை தூதுவர்களுக்கும், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் காண்பித்தோம்.
ஆனால், மறுபுறம் சர்வதேசத்திடம் யாசகம் கேட்டு சென்றுகொண்டிருக்கின்றோம்.
இதுவா சுதந்திரம்? புரட்சியுடன் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் என்று ஜனாதிபதி கூறுகின்றார். அது எமது சுதந்திரமா அல்லது ஜனாதிபதியின் சுதந்திரமா?
இலங்கை இதற்கு முன்னர் இழைத்துள்ள பல தவறுகளின் காரணமாகவே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதில் பிரதானமானது திறந்த பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தியமையாகும்.
எமது நாட்டில் காணப்படும் பொருட்களுக்கான தட்டுப்பாடு இந்தியாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. சீனாவுடனும் இவ்வாறான உறவே காணப்படுகிறது.
தற்போதுள்ள கடனை மீள செலுத்த முடியாமல், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து மேலும் கடன் பெறவுள்ளனர். நாம் எமது தாய்நாட்டை சீரழித்துள்ளோம் என்றார்.