தேர்தலுக்கு நிதி வழங்காவிடின் நீதிமன்றத்தை நாடுவோம்

137 0

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என நிதி அமைச்சோ அல்லது திறைசேரியோ குறிப்பிடுமாயின் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகும்.

இனியும் தேர்தலுக்கு நிதி வழங்க முடியாது என்று திறைசேறி கூறினால் அதன் அதிகாரிகளுக்கு எதிராகவும் நீதிமன்றத்தை நாடுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மக்கள் பெற்றுக் கொண்ட வெற்றியாகும். மக்களின் அடிப்படை உரிமையாகிய தேர்தலை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நிறைவடையும் வரை , தேர்தலை ஒத்தி வைக்குமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

அத்தோடு நிதி அமைச்சோ அல்லது திறைசேரியோ இனி தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயற்பாடாகும்.

எனவே நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் அதிகாரிகள் இனியும் அரசாங்கத்தின் தேவைக்கேற்ப செயற்பட்டால் அவர்களுக்கு எதிராகவும் நாம் நீதிமன்றத்தை நாடுவோம்.

நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்கப் பெறும். நாட்டை வங்குரோத்தடையச் செய்த அரசாங்கம் இன்னும் ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருப்பது அருவருப்பாகவுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளின் ஊடாக ஐக்கிய தேசிய கட்சிக்கும் , பொதுஜன பெரமுனவிற்கும் சிறந்த பாடம் புகட்டப்படும். இனியும் எந்தவொரு காரணிக்காகவும் தேர்தலைக் காலம் தாழ்த்த முடியாது என்றார்.