கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 50 துப்பாக்கி தோட்டாக்களை எடுத்துச் செல்ல முற்பட்ட வர்த்தகர் ஒருவரை விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற அனுமதித்தமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது பொலிஸாருக்கோ அல்லது விமானப்படையினருக்கோ தகவல் வழங்கியிருக்க வேண்டும் எனவும், ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யாமல் குறித்த வர்த்தகரின் சாரதியிடம் தோட்டாக்களை ஒப்படைத்துள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜனவரி 29 ஆம் திகதி சிங்கப்பூருக்கு வந்த 44 வயதான வர்த்தகர் ஒருவர் 50 9mm துப்பாக்கி தோட்டாக்களை எடுத்துச் செல்ல முற்பட்ட போது விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் பாதுகாப்பு பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
அப்போது, சம்பந்தப்பட்ட வர்த்தகர் வெடிமருந்துகளுக்கான உரிமம் தன்னிடம் இருப்பதாகக் காட்டியதை அடுத்து அதிகாரிகள் அவரை விடுவித்து, வெளிநாடு செல்ல அனுமதித்துள்ளனர்.
அவர் எடுத்துச் செல்ல முயன்ற 50 தோட்டாக்கள் விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அவரது சாரதியிடம் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வாறான நிலையில், விமான நிலையத்தின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அல்லது விமானப் படை வீரர்களுக்கும், விமான நிறுவனத்துக்கும் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த தினத்தில் அங்கிருந்த அதிகாரிகள் பொலிஸாருக்கோ அல்லது விமானப்படையினருக்கோ தெரிவிக்கவில்லை என எமது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், துப்பாக்கிகளுக்கு வழங்கப்படும் உரிமத்திற்கு 10 தோட்டாக்களை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.
ஆனால் குறித்த வர்த்தகரிடம் 50 தோட்டாக்கள் இருப்பது பிரச்சினைக்குரிய நிலைமை என பாதுகாப்பு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த விமானப்படை அதிகாரிகள் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இது குறித்து விமானப்படைத் தளபதிக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உள்ளக விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விமான நிலையம் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் அப்போது உரிய நடவடிக்கை எடுக்காததால், சம்பந்தப்பட்ட வர்த்தகர் என்ன காரணத்திற்காக தோட்டாக்களை எடுக்க முயன்றார் என்பதை கண்டறிய முடியவில்லை என பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்தனர்.