13வது அரசியலமைப்பு திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினை உட்பட அனைத்து இன மக்களின் உரிமைப் பிரச்சினைகளும் அதன் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என அமைச்சர் நசீர் அஹமட் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரண்டாவது தினமாக இடம்பெற்ற ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
ஒன்பது மாத குறுகிய காலகட்டத்தில் நாட்டில் குறிப்பிட்டளவு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாராட்ட வேண்டும். எரிபொருள் நெருக்கடி, எரிவாயு நெருக்கடி ,அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிசை யுகம் மற்றும் பாராளுமன்றத்திற்கு கூட வருகை தர முடியாத நிலையை மாற்றியமைத்துள்ள பெருமை ஜனாதிபதியையே சாரும் .
பல்வேறு நெருக்கடி நிலையிலிருந்து நாடு மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உறுதியாகியுள்ளது. அதனையடுத்து சர்வதேச நாடுகள் இலங்கையின் கடன் மறு சீரமைப்பு தொடர்பில் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.
பல்வேறு சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாட்டில் இந்தளவு மாற்றம் ஏற்பட்டுள்ளதை சாதாரணமாக குறிப்பிட்டு விட முடியாது எவராலும் பொறுப்பேற்க முடியாது என்ற நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்று இந்தளவு மாற்றத்தை கொண்டு வந்துள்ளார் என்பது பெருமைக்குரியதே.
அதே வேளை அண்மையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர் நாட்டின் எதிர்கால திட்டங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பங் கீ மூனுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் நாட்டில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.