சமஷ்டி என்ற நிலைப்பாட்டிலிருந்து நாம் ஒருபோதும் விலக மாட்டோம்

89 0

அதிகாரப்பகிர்வு என்ற பேர்வையில் மாயாஜால வித்தை காட்டி எம்மை ஏமாற்ற முடியாது. எமது மக்கள் கோருகின்ற சமஷ்டி தீர்வுதான் எமது நிலைப்பாடு.அதிலிருந்து நாம் ஒருபோதும் விலக மாட்டோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

திருகோணமலை வெருகல் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவர் ச.குகதாசன், மாவட்டக்கிளை செயலாளர் க.செல்வராஜா, பொருளாளர் வெ.சுரேஸ் குமாா் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உறுப்பினர் சுமந்திரன் தொடரந்தும் உரையாற்றுகையில்,உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தெற்கில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தப் ‍போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. மக்களுடைய தீர்ப்பு அவர்கள் அளிக்கும் வாக்குச் சீட்டில் தான் இருக்கிறது.

தெற்கிலே எவ்வாறான மாற்றம் ஏற்பட்டாலும் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் நிலைப்பாடான தம்மைத் தாமே ஆள அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து  சிறிதும் விலக வில்லை. தொடரச்சியாக தமிழ் மக்கள் அதே நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்  என்பதை இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் வெளிப்படுத்த வேண்டும்.

அதிகாரப் பகிர்வு என்ற பேர்வையில் மாயாஜால வித்தை காட்டி எம்மை ஏமாற்ற முடியாது. எமது மக்கள் கோருகின்ற சமஷ்டி தீர்வினைத்தான் நாங்கள் எமது நிலைப்பாடாக கொண்டிருக்கின்றோம். அதிலிருந்து நாம் ஒரு போதும் விலக மாட்டோம் என  தெரிவித்தார்.