காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவந்த ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சார்பில் குரல்கொடுத்துவரும் தமிழ் அமைப்புக்கள் திருப்தி வெளியிடப்பட்டுள்ளன. காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கு மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அந்த ஆணைக்குழுவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லை என்றும் சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ். இரத்தினவேல் தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட் காலம் 2016யூலை 15 ஆம் திகதி முடிவுக்கு வந்துள்ளது.
இந்த ஆணைக்குழுவின் ஆயுட் காலத்தை நீடிக்குமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம்மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கும் இதுவரை பதிலளிக்கப்படவில்லை என பரணகம ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனால் தமக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க முடியாது போய்விட்டதுடன்,எண்ணாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை விசாரிக்கவும் முடியாது போய்விட்டதாக மெக்ஸ்வெல் பரணகம ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார். எனினும் இதனை பாதிக்கப்பட்ட மக்களுக்காக செயற்பட்டுவரும் தமிழ் அமைப்புக்கள் நிராகரிக்கின்றனர்.