மருத்துவர் சிவரூபன் பிணையில் விடுதலை!

156 0

விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க முற்பட்டதாக 2019ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் கைதான பளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.முன்னணி சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வாவின் நீண்ட வாதங்களின் தொடர்ச்சியாக வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் கிளிநொச்சி மேல்நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

2019ம் ஆண்டின் ஓகஸ்ட் 18ம் திகதி இலங்கை இராணுவபுலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டிருந்த வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் பின்னர் காவல்துறையிடம் கையளிக்கப்பட்டிருந்தார்.எனினும் அவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் பளை வைத்தியசாலையில் வைத்து கைதாகியதாக பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அவரது கைதினை தொடர்ந்து கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் அனைவரும் நீண்டகால சிறைவாத்தின் பின்னராக குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டிருந்தனர்.

2019ம் ஆண்டினில் தெற்கில் ஜனாதிபதி தேர்தல் கால அரசியல் சூழலில் விடுதலைப்புலிகளது மீள் எழுச்சி தொடர்பில் உருவாக்கப்பட்ட அரசியல் பூதாகரப்படுத்தலின் தொடர்ச்சியாக   வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன்  கைதாகியிருந்ததாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன.

இந்நிலையில் 3வருடங்களிற்கு மேலான சிறை வாசத்தின் பின்னராக மருத்துவர் சின்னையா சிவரூபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.