ஆசிரிய நியமனத்தை இளம் பட்டதாரிகளுக்கு வழங்குங்கள்!

137 0

ஆசிரிய நியமனத்தினை வேலையற்ற பட்டதாரிகளான இளம் பட்டதாரிகளுக்கு வழங்க வேண்டும் என வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். ஊடக அமையத்தில்  நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

வேலையில்லாப் பட்டதாரிகள் அமைப்பின் ஊடாக அறியத் தருவது யாதெனில்,

தற்போது நாட்டில்  ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவாக, நாட்டை அபிவிருத்தி அடையச்செய்யும் பட்டதாரிகளுக்கு சவால் உருவாகியுள்ளது.

அரசாங்கம் பட்டதாரிகளுக்கு நியமனங்களை இரத்து செய்துள்ளது, தனியார் நிறுவனங்கள் பட்டதாரிகளை நிராகரித்து வருகின்றன. சுயதொழிலை உருவாக்குவதற்கான முதலீடுகள் இன்றி வங்கிகளில் வட்டிக்குப் பணம் பெற்று சுயதொழிலை உருவாக்கவும் முடியவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் எமது சமுதாயத்தின் வரிப்பணத்தில் கல்விகற்ற நாம் சமுதாய நலனுக்காக செயற்படாமல் இருப்பது எமக்கு  குற்ற உணர்வினைத் தருவதோடு,  பெற்றவர்களுக்கும், சகோதரர்களுக்கும் உரிய கடமைகளை நிறைவேற்ற முடியாமலும் எமது எதிர்காலத்துக்கான சேமிப்பையோ  வாழ்க்கையைத் தொடங்குவதற்கான திட்டமிடலையோ உருவாக்கமுடியாத சூழலிலும்  தள்ளப்பட்டுள்ளோம்.

எமது எதிர்காலம்  தொடர்பில் கேள்வியையும் அதன் வழியே,விரக்தியையும் கொண்டிருப்பது பெரும் மனவேதனையைத் தருகின்றது.

ஆகவே, எமக்கான எதிர்காலம் மீட்ச்சி பெறாதா? எனும் கவலையோடு, அரசாங்கம் எதிர்க்கொண்டுள்ள பிரச்சனைககளை அறிந்தும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் சூழ்நிலைக்கு வந்துள்ளோம்.

நாம் அரசாங்கத்தால் கொடுக்கப்படவிருக்கும் ஆசிரிய நியமனத்துக்கு பட்டதாரிகள் தேர்வு இடம்பெற இருப்பதனை நன்கு அறிவோம்.

ஆகவே, இளம் பட்டதாரிகளாகிய எங்களின் மீது அக்கறை செலுத்தும் கடமையும் பொறுப்பும் உங்களுக்கு இருக்குமென்பதையும் நாம் உணர்கின்றோம்.

1.பொருத்தமான பட்டதாரிகளை பொருத்தமான ஆசிரியர் நியமனங்களுக்கு உள்வாங்க வேண்டும்.

2.முப்பத்தி ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களை ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்க வேண்டும்.

3.ஓய்வூதியத்திற்கு உரிய வயதினை அண்ணளவாக குறைத்தல் வேண்டும் .

04. தகுதி வாய்ந்த ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொண்டதன் பின்னர் பாடங்களுக்கான பற்றாக்குறை ஏற்படும் இடத்தில் தகுதி வாய்ந்த பட்டதாரிகளை பாட ரீதியாக வெளியிலிருந்து இணைத்துக்கொள்ள வேண்டும்.

05.யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவிருக்கும் இந்திய நிதி திட்டத்தில் உருவான கலாச்சார மண்டபத்துக்கான பணியாளர்களாக, தகுதியான பட்டதாரிகளையே உள்வாங்க வேண்டும்.

06.யாழ்ப்பாணத்தில் உருவாகும் நகரசபை மண்டபத்துக்கும் உரிய பட்டதாரிகளை உள் சேர்க்கவேண்டும்.

07.காங்கேசன் துறையில் உருவாகவிருக்கும் இந்திய இலங்கை கடல்வளி வர்த்தக மையத்தின் முக்கியமான பணிக்கு தகுதியான பட்டதாரிகளையே உள் சேர்க்க வேண்டும்.

மேற்கூறிய அனைத்தையும் நிவர்த்தி செய்வதினூடாக எமக்கான வேலைவாய்ப்பை உருவாக்கமுடியுமென எதிர்பர்க்கின்றோம்.

ஆகவே, எமது எதிர்காலத்தின் மேல் கரிசனை கொண்டு எமது கோரிக்கைகளை பரிசீலித்து ஒரு திடமான தீர்வை பெற்றுத்தருவீர்கள் என நம்புகின்றோம் என தெரிவித்தனர்.