கிளிநொச்சி மாவட்டத்தில் உளவளத்துணை மற்றும் உளவளத்துணை சார்ந்து பணிபுரிவோருடனான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நேற்றைய தினம் (09.02.2023) குறித்த கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
மாவட்ட மட்டத்தில் காணப்படும் உள சமூகப் பிரச்சினைகளை அடையாளங்காணல், அவற்றை குறைத்தல், தடுத்தல் மற்றும் அதற்கான தொடர் கண்காணிப்புக்களை மேற்கொள்வதனை நோக்காகக் கொண்டு குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது கடந்த 26.10.2022 அன்று இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலின் முன்னேற்றம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
தொடர்ந்து, குடும்ப புனர்வாழ்வு நிலையம் மற்றும் ஒப்ரெக் நிறுவனத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் உளவளத்துறை சார்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மேலும், உளவளத்துறை தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் மற்றும் பயிற்சி பெற்றவர்களை பயன்படுத்தும் வழி வகைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட உள மருத்துவ பொறுப்பதிகாரி மருத்துவர் ஜெயராஜா, உதவி மாவட்ட செயலாளர் ஜெ.றெமின்ரன், குடும்ப புனர்வாழ்வு நிலையத்தினர், உள வள ஆற்றுப்படுத்துனர்கள், ஒப்ரெக் நிறுவனத்தினர், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், பாடசாலைகளில் உளவளத் துணை சார்ந்து பணிபுரியும் ஆசிரியர்கள், பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பகுதி உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.