சட்டத்தின் ஆட்சி இருப்பதே இந்தியா முன்னேற காரணம்

109 0

இந்தியா முன்னேறுவதற்குக் காரணம், அங்கு சட்டத்தின் ஆட்சி இருப்பதுதான் என்றும், பாகிஸ்தானில் சட்டத்தின் ஆட்சி இல்லாமல் போகுமானால் அதற்கு எதிர்காலம் இருக்காது என்றும் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் தெரீக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், லாகூரில் உள்ள தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வெளிநாடுகளைச் சேர்ந்த செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பஞ்சாப் மற்றும் கைபன் பக்துன்வா மாகாணங்கள் போன மாதமே கலைக்கப்பட்டுவிட்டன. இந்த மாகாணங்களில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதை எதிர்த்தும் தேர்தல் அறிவிப்பை உடனடியாக வெளியிட வலியுறுத்தியும் அகிம்சை முறையில் சிறை நிரப்பும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளேன். இதில் முதல் ஆளாக நான் சிறைக்குச் செல்வேன்.

நான் செய்த மிகப் பெரிய தவறு ராணுவத் தளபதியாக இருந்த கமர் ஜாவெத் பாஜ்வாவுக்கு பதவி நீட்டிப்பு செய்ததுதான். நவாஸ் ஷெரீப், ஜர்தாரி போன்ற மோசடி பேர்வழிகள் பக்கம் ராணுவம் சாயும் என்பதை புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டேன். பல கோடி ரூபாய் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நவாஸ் ஷெரீப், அப்போதைய ராணுவத் தளபதி பாஜ்வாவுடன் கூட்டு சேர்ந்து வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.

தற்போது அவர்கள் என்னை அரசியலில் இருந்து வெளியேற்றவும், தகுதி இழப்பு செய்யவும் முயல்கிறார்கள். இங்கிலாந்தில் இருந்து நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப வேண்டுமானால், அவர் அரசுக்கு அளித்த உறுதியை ஏற்க வேண்டும். நான் ஆட்சியில் இருந்தபோதுதான், அவரை அப்படி உறுதி அளிக்க வைத்தேன். அதன் காரணமாகவே, அவர் என்னை தகுதி நீக்கம் செய்ய திட்டமிடுகிறார். தற்போது ராணுவத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ராணுவத்துக்கும் மக்களுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. நாட்டை கொள்ளை அடித்தவர்களுக்கு ஆதரவாக ராணுவம் செயல்படுவதை மக்கள் எதிர்க்கிறார்கள். இது நாட்டுக்கு மிகப் பெரிய ஆபத்து.

பாகிஸ்தானின் அரசியல் சாசனத்தை பாதுகாக்க நீதித் துறை முன்வர வேண்டும். பஞ்சாப் மற்றும் கைபன் பக்துன்வா மாகாண தேர்தலை தள்ளிவைக்க ஆட்சியாளர்கள் திட்டமிடுகிறார்கள். ஆனால், சட்டப்படி மாகாண அரசு கலைக்கப்பட்ட 90 நாட்களில் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதை நீதித் துறை உறுதிப்படுத்த வேண்டும்.

நாம் உதாரணத்திற்கு இந்தியாவையே எடுத்துக்கொள்ளலாம். இந்தியா முன்னேறுகிறது என்றால், அதற்குக் காரணம் அங்கு சட்டத்தின் ஆட்சி இருப்பதுதான். பாகிஸ்தானில் சட்டத்தின் ஆட்சி இல்லாமல் போகுமானால் அதற்கு எதிர்காலம் இருக்காது. இந்தியாவுடன் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், அதற்கு முதலில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திருப்பி அளிக்க வேண்டும்” என்றார்.